தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின்பகிர்மானக் கழகத்தில் நிதி நெருக்கடி இருந்தாலும், தமிழகத்தில் தற்போதைக்கு மின்சாரக் கட்டணம் உயர்த்தப்படாது என மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
சென்னையில் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், நிதி நெருக்கடி இருந்தாலும் அதனை மக்களை நோக்கி திருப்ப அரசுக்கு விருப்பமில்லை எனக் கூறினார். இன்னும் சில மாதங்களுக்கு கட்டண உயர்வு இருக்காது எனவும், தற்போது நாடு திரும்பியுள்ள முதலமைச்சரிடம் இதுகுறித்து பேச இருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும் மின்சாரக் கட்டணத்தை மாற்றுவதற்கு தங்களிடம் தற்போது எந்த முன்மொழிவும் இல்லை எனத் தெரிவித்த அமைச்சர், புதிய மின் இணைப்புகளுக்கான கட்டணத்தை திருத்துவதற்கான நடவடிக்கைகளில் மட்டுமே தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார். ஆனால் அதிலும் ஒரு முடிவு எட்டப்படவில்லை எனவும் கூறினார்.
இச்சூழலில் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்துக்கு நடப்பாண்டுக்கு தேவையான வருவாய் அளவைக் கூட முன்வைக்கவில்லை எனக் கூறிய அமைச்சர், நடப்பாண்டில் டான்ஜெட்கோவின் நிதிச்சுமை 7 ஆயிரம் கோடி ரூபாயாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
கஜா புயல் தாக்கத்தால் மின் கட்டமைப்புகளுக்கு ஏற்பட்ட சேதம் தான் இந்த நிலைக்கு காரணம் எனத் தெரிவித்த அமைச்சர், கஜா புயலால் சேதமடைந்த மின் கட்டமைப்புகளை சீரமைப்பதற்கு மட்டுமே 2 ஆயிரத்து 500 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
ஊதியக்குழுவின் பரிந்துரைகளை அமலாக்குவதில் ஆயிரத்து 200 கோடி ரூபாய் கூடுதலாக செலவானதாகவும், அது தவிர நிலக்கரி விலை, அதனை கொண்டு வரும் செலவு, மத்திய அரசின் தொகுப்பிலிருந்து பெறும் மின்சாரத்தின் விலை ஆகிய அனைத்தும் உயர்ந்துவிட்டதாகவும் அமைச்சர் தெரிவித்தார். மத்திய அரசு தொகுப்பிலிருந்து பெறப்படும் ஒரு யூனிட் மின்சாரத்தின் விலை, 44 காசுகள் உயர்ந்திருப்பதாகவும் கூறினார்.
காற்றாலை மின்சாரம் சிறிதளவாகவே உள்ளதாகவும், காற்று வீசும் காலமும் முடிவுக்கு வர இருப்பதாகவும் கூறிய அவர், அனல் மின்சார அலகுகள் தயாராக உள்ளதாகவும் நிலக்கரி சேமிப்பும் உயர்த்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். எனவே எந்த இடத்திலும் மின்வெட்டு ஏற்படவில்லை எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் காற்றாலை மின்சாரத்தை பயன்படுத்துவதில், காற்றாலை நிறுவனங்களுடன் பிரச்சனைகள் உள்ளதாகவும், அவை மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் விசாரணையில் இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார். இதுபோன்ற பிரச்சனைகளால் ஆண்டுக்கு 2 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பை சந்திப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.