தமிழகத்தில் காய்ச்சலால் ஒரு உயிரிழப்பு கூட ஏற்படக் கூடாது என உறுதி

தமிழகத்தில் காய்ச்சலால் ஒரு உயிரிழப்பு கூட ஏற்பட கூடாது என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விஜயபாஸ்கர், தமிழகம் முழுவதும் உள்ள சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.

டெங்கு காய்ச்சலை தடுக்க என்ன விதமான விரைவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்கள் விரைவாக குணமாக எடுக்கப்பட்ட நடவடிக்கை உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி சிகிச்சை அளிக்க அரசு மருத்துவமனைகளில் மருத்துவ வசதிகள் தயார் நிலையில் இருப்பதாகத் தெரிவித்தார்.

காய்ச்சல் ஏற்பட்டால் மக்கள் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற வேண்டும் என்ற அவர், அவர்களை புறநோயாளியாகக் கருதாமல், 3 நாட்கள் தொடர் சிகிச்சை அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

காய்ச்சல் பாதித்த குழந்தைகளை மருத்துவமனையில் அனுமதித்து உரிய சோதனை மேற்கொண்டு சிகிச்சை அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

குழந்தைகளுக்கு காய்ச்சல் ஏற்பட்டால் பெற்றோர் அலட்சியமாக இல்லாமல் எந்த வகை காய்ச்சல் என அரசு மருத்துவமனைக்கு சென்று உறுதிப்படுத்தவும் அறிவுறுத்தினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே