தஞ்சாவூரில் 4 பேருக்கு டெங்குக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவி வருவதால், மருத்துவமனைகளில் தனி வார்டுகள் அமைக்கப்பட்டு, டெங்கு அறிகுறி உள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற வந்த 28 பேரில், 4 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது ரத்த பரிசோதனை மூலம் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அவர்களுக்கு தனி வார்டில் வைத்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். கடந்த இரு தினங்களுக்கு முன், கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்த 5 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில் டெங்கு பாதிப்பால் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை பார்வையிட்ட மருத்துவமனை டீன் குமுதா லிங்கராஜ், டெங்கு நோயாளிகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

இவர்களுக்கென தனி வார்டு அமைத்து, கஞ்சி, வடிகட்டிய வெந்நீர், நிலவேம்பு கசாயம் வழங்கி வருவதாகவும் அவர் கூறினார்.

மேலும் காய்ச்சலுடன் சிகிச்சைக்கு வருபவர்களுக்கு நிலவேம்பு கசாயம் கொடுக்கப்படுவதாகவும், சிகிச்சைக்கு தேவையான மருந்து மாத்திரைகளும் தயார் நிலையில் இருப்பதாகவும் குமுதா லிங்கராஜ் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே