சிவகார்த்திகேயனுக்கு தங்கை வேடம், விக்ரம் பிரபுவிற்கு தங்கை வேடம் என கோலிவுட்டில் கதைகளை தேடிப்பிடித்து வலுவான கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். அவரது கதாபாத்திரங்கள் தேர்வு குறித்து அலசுகிறது இந்த செய்தி தொகுப்பு.

கதைக்கு தேவைப்பட்டால் எப்படி வேண்டுமானாலும் நடிக்கத் தயார். தமிழகத்தில் பெரும்பாலான நடிகைகள் கூறும் வார்த்தை இது. இந்த வார்த்தையின் பின்னணியில் கவர்ச்சியும் ஆடைகுறைப்பு மட்டுமே இருப்பதுதான் இதுவரை கோலிவுட் கண்டறிந்த சினிமா சூத்திரம்.

ஆடை இன்றி நடிப்பது, அரை நிர்வாணமாக நடிப்பது, விபச்சாரி வேடத்தில் நடிப்பது போன்றவைதான் நடிகைகளின் மிகப்பெரிய தைரியமாக பார்க்கப்பட்டு வருகிறது.

ஆனால் முன்னணி நடிகையாக இருக்கும்போதே முன்னணி கதாநாயகர்களுக்கு தங்கையாக நடிப்பதும், கதையின் வலுவை கருதி அப்படி ஒரு முடிவை எடுத்தேன் எனக் கூறுவதும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஒருவரால் மட்டுமே முடியும் என்ற நிலைக்கு வந்துள்ளது கோலிவுட்.

பாலிவுட் வரை சென்று வந்த போதிலும் கதைக்காக இப்படி ஒரு முடிவை ஏன் எடுத்தார் ஐஸ்வர்யா என்ற குரல்கள் கோடம்பாக்கத்தில் வலுவாக ஒலிக்க தொடங்கி உள்ளன. சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக நம்ம வீட்டு பிள்ளை படத்திலும், விக்ரம் பிரபுவுக்கு தங்கையாக வானம் கொட்டட்டும் படத்திலும் அவர் நடித்து வருவது தான் இந்த பேச்சிற்கு காரணம். ஆனால் கதைக்களம் சிறப்பானது என்றால் எந்த கேரக்டரையும் தாங்கி நடிக்கலாம் என்பதை ஏற்கனவே நிரூபித்திருக்கிறார் ஐஸ்வர்யா.

சிறுவயதிலேயே இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடிப்பதற்கான தைரியம் தன்னிடமிருந்ததை அடிக்கடி சினிமா உலகிற்கு நினைவுகூர்ந்து கொண்டிருக்கிறார் ஐஸ்வர்யா. அதுவும் சினிமா உலகிற்குள் கால் வைத்து அந்த தருணத்தில் அவர் எடுத்த முடிவு என்பது அனைத்து கதாநாயகியாலும் இயலாதது.

தன்னுடைய கரியருக்கு ஆபத்து என பலர் ஆரூடம் கணித்த போதும், அதனை சவாலாக ஏற்று தான் தனது வெற்றிக்கு காரணம் என நம்புகிறார் ஐஸ்வர்யா.

கனா போன்ற பெண்களை மையப்படுத்திய படத்தில் கதாநாயகியாக நடித்த பிறகும் தற்போது முன்னணி ஹீரோக்களுக்கு தங்கை என்பது மிக தைரியமான முடிவே.

தங்கையாக நடிப்பதற்காக வருத்தப்படவில்லை அடுத்தடுத்த படங்களில் சிவகார்த்திகேயனுக்கும், விக்ரம்பிரபுவுக்கும் ஜோடியாக நடித்தால் சரியாகிவிடும். சிவாஜி, சாவித்திரி போன்றவர்கள் அப்படி நடிக்கவில்லையா என்ன என்ற ஐஸ்வர்யாவின் கேள்விதான் அவரது வெற்றிக்கான சூத்திரம்.

சிவகார்த்திகேயனை “அண்ணா” என்று அழைப்பதில் தனக்கு வருத்தம் தான், படம் பார்த்தால் இந்த கேள்விகள் எழவே எழாது என்ற அவரது நம்பிக்கை தான் மற்ற கதாநாயகிகளில் இருந்து தனித்து தெரிய வைக்கிறது.

வெற்றி என்பது வெறும் வியாபாரம் மட்டுமல்ல. காலம் கடந்தும் ஒரு நாயகியை பற்றி பேசவேண்டும் என்பதில் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டும் என்பதே ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்களுக்கு, அவரது ரசிகர்கள் வைக்கும் கோரிக்கை.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே