சேலம் அருகே கல்லூரி மாணவர் கொலை – முன்னாள் நண்பர்கள் 2 பேர் கைது

சேலம் அருகே கல்லூரி மாணவர் ஒருவரை இரும்பு ராடால் தாக்கி கொலை செய்த அவரது முன்னாள் நண்பர்கள் 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.

சேலம் அருகே பனமரத்துப்பட்டியில் உள்ள நாழிக்கல்பட்டியை சேர்ந்தவர் திலீப்குமார் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் பி.ஏ. 2ஆம் ஆண்டு படித்து வந்தார்.

கடந்த 4ஆம் தேதி நடைபெற்ற விநாயகர் சிலை ஊர்வலத்தில் நடனமாடியபடி சென்ற முன்னாள் நண்பர்கள் திருநாவுக்கரசு, சரவணன் மற்றும் சூர்யாவை திலீப்குமார் கேலி கிண்டல் செய்ததாகத் தெரிகிறது.

இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது அங்கிருந்த பொதுமக்கள் இருதரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் திலீப்குமார் நேற்று நள்ளிரவு தனது வீட்டருகே இருந்தபோது அங்கு வந்த திருநாவுக்கரசு, சரவணன், சூர்யா ஆகியோர் இரும்பு ராடால் அவரை சரமாரியாக தாக்கியதாகவும் தப்பி ஓடிய அவரை துரத்திச் சென்று 3 பேரும் நடத்திய தாக்குதலில் திலீப் குமார் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது.

திலீப் குமார் தாக்கப்பட்டதை அறிந்து அங்கு வந்த உறவினர்கள், அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி திலீப் குமார் உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து, கொலையாளிகளை கைது செய்யக்கோரி, அவரது உறவினர்களும், நண்பர்களும் மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் போலீஸார் 3 தனிப்படைகளை அமைத்து விசாரணை நடத்தி, திருநாவுக்கரசு, சரவணன் ஆகியோரைக் கைது செய்தனர். தப்பியோடிய சூர்யாவை போலீஸார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே