சென்னை வந்தார் பிரதமர் மோடி

தனி விமானத்தின் மூலம், இன்று காலை 9 மணியளவில் சென்னை விமான நிலையம் வந்திறங்கிய பிரதமர் மோடியை, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் தமிழக அமைச்சர்கள், உயரதிகாரிகள் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

இதைத் தொடர்ந்து விமான நிலையம் அருகே பிரதமர் மோடியை வரவேற்கத் திரண்டிருந்த பாஜகவினர் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார். சென்னைக்கு வரும்போதெல்லாம் தாம் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாக அவர் தெரிவித்தார்.

தமது அமெரிக்கப் பயணம் பற்றி குறிப்பிட்ட அவர், தமிழ் மொழியின் தொன்மை மற்றும் பெருமை குறித்து அங்கு பேசியதைத் தொடர்ந்து, அது அமெரிக்கா முழுவதும் எதிரொலிக்கிறது என்றார்.

இந்தியா குறித்து அமெரிக்காவிலும், உலகம் முழுவதும் நிறைய எதிர்பார்ப்புகள் உள்ளதாகக் குறிப்பிட்ட பிரதமர், 130 கோடி மக்களும் ஒருங்கிணைந்து உழைத்தால் இந்தியா சர்வதேச அளவில் மிகப்பெரிய கவுரவத்தை பெறும் என்றார்.

ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை மக்கள் முற்றாகக் கைவிட வேண்டும் என்றும் மோடி கேட்டுக்கொண்டார்.

நிகழ்ச்சியில் பேசிய நரேந்திர மோடி, தன்னைப் பொறுத்தவரை ஹேக்கதானில் பங்கேற்றவர்கள் அனைவருமே வெற்றியாளர்கள்தான் என்றார்.

முடிவுகளைப் பற்றி கவலைப்படாமல் திறமையை வெளிப்படுத்தும் வகையில் கடின முயற்சியில் ஈடுபடுபவர்களை வெற்றியாளர்கள் என்றே தான் கருதுவதாக அவர் தெரிவித்தார்.

சென்னை மற்றும் தமிழகத்தின் உணவுகளான இட்லி, சாம்பார், வடை பற்றி பிரதமர் மோடி சுவையான கருத்துகளை வெளியிட்டார்.

சென்னையின் காலை உணவான இட்லி, தோசை, வடை ஆகிய உணவுகள் உற்சாகம் தரக்கூடியவை என்று மோடி கூறினார்.

சென்னை மிகச்சிறந்த கலாச்சாரம், மாபெரும் பாரம்பரியம், சிறந்த உணவு வகைகளை கொண்டது என்று கூறிய அவர் மாமல்லபுரம் மிகச்சிறந்த தொன்மையான சிற்பங்களை கொண்ட நகரம் என்றும் புகழாரம் சூட்டினார்.

தமிழர்களின் விருந்தோம்பல் மிகச் சிறப்பானது என்றும் பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார். 

இந்திய பொருளாதாரம் 5 டிரில்லியன் டாலர் என்ற இலக்கை நோக்கி முன்னேறி வருகிறது என்று கூறிய மோடி சிங்கப்பூரை போல, பிற ஆசிய நாடுகளுடன் இணைந்து ஹேக்கத்தான் போட்டிகளை நடத்த ஆலோசனை நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே