சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் கனமழையால் சாலைகளில் வெள்ளம்

வெப்பச்சலனம் காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் மழை இடைவெளி விட்டு இரவு வரை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில் வெப்பச் சலனத்தால், இந்த மழை மேகங்கள் உருவாகி பரவலாக மழை பெய்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னை கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், கோயம்பேடு, தியாகராய நகர், நுங்கம்பாக்கம், சைதாப்பேட்டை, கோடம்பாக்கம் உள்பட சென்னை நகரின் பல்வேறு இடங்களில் இடி மின்னலுடன் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இதே போல் சென்னை விமான நிலையம், குரோம்பேட்டை, வேளச்சேரி, பள்ளிக்கரணை உள்ளிட்ட புறநகர்ப் பகுதிகளிலும் கனமழை பெய்தது.

சுமார் அரை மணி நேரமாக கொட்டி தீர்த்த கனமழையால் சாலைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடியது. சென்னை அடையாறு கிரீன்வேஸ் சாலை அருகே மரம் வேரோடு சாய்ந்ததால், சாலையை கடக்க இரு சக்கர வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே