விழுப்புரம் மாவட்ட காவல்துறையினருக்கு கடும் சவாலாக வலம் வந்தவன் வெடிகுண்டு தாதா மணி என்கிற மணிகண்டன்.

ரவுடி மணி மீது 8 கொலைகள், ஆள்கடத்தல் உள்ளிட்ட 28 வழக்குகள் உள்ளன. ஆரோவில் காவல் நிலையத்தில் மட்டும் இவன் மீது பெரும்பாலான நிலுவையில் வழக்குகள் உள்ளன.

கடந்த 21ந்தேதி குயிலாப்பாளையம் பகுதியை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் பாபு என்பவர் வெடிகுண்டு வீசி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் ராமு என்பவரின் தூண்டுதலின் பேரில் தாதா மணி கூலிப்படையாக செயல்பட்டு, வெடிகுண்டு வீசி கொலை செய்யும் திட்டத்தை நிறைவேற்றியது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த கொலை தொடர்பாக மணியின் கூட்டாளிகள் 3 பேர் நீதிமன்றத்தில் சரண் அடைந்த நிலையில் முக்கிய குற்றவாளியான மணியையும், தூண்டிய ராமு அவரது மனைவி ஆகியோரையும் ஆரோவில் காவல்துறையினர் தேடி வந்தனர்.

இந்த நிலையில் கூலிப்படைக் கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் சென்னையில் பதுங்கி இருப்பது தெரியவந்தது.

விழுப்புரம் காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவின் பேரில், ஆரோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பிரபு, தனிப்படை உதவி ஆய்வாளர் பிரகாஷ் உள்ளிட்ட 6 பேர் கொண்ட தனிப்படை போலீசார் சென்னை விரைந்தனர்.

சென்னை அண்ணா நகர் மேற்கு பகுதியில் பதுங்கி இருந்த தாதா மணியின் வீட்டை சுற்றி வளைத்த போலீசார் அதிரடியாக உள்ளே நுழைந்தனர்.

போலீசாரை பார்த்ததும் தாதா மணி கத்தியால் தாக்கியதாகவும், அப்போது உதவி ஆய்வாளர் பிரபு தலையில் வெட்டு விழுந்ததால் போலீசார் தற்காப்பு தாக்குதலில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.

மீண்டும் கத்தியால் தாக்குதல் நடத்த முயன்ற போது, தற்காப்புக்காக உதவி ஆய்வாளர் பிரகாஷ் இரண்டு முறை துப்பாக்கியால் சுட்டார். இதில், வெடிகுண்டு தாதா மணி துப்பாக்கி குண்டுக்கு இலக்கானான்.

ரத்த வெள்ளத்தில் சரிந்த மணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

சம்பவ இடத்தை தமிழக சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி ஜெயந்த் முரளி, விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் ஆகியோர் பார்வையிட்டனர்.

காயமடைந்த காவல் அதிகாரிகளிடம் நலம் விசாரித்தனர்.

ரியல் எஸ்டேட் அதிபர் பாபு கொலை வழக்கில் தொடர்புடைய மற்றவர்களை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

ரியல் எஸ்டேட் அதிபர் கொலை வழக்கு உள்ளிட்ட 5க்கும் மேற்பட்ட கொலை வழக்குகளில் வெடிகுண்டு வீசி திட்டத்தை கச்சிதமாக முடித்துள்ளான் தாதா மணி என்று சுட்டிக்காட்டுகின்றனர் காவல்துறையினர்.

தனக்கு என்று ஒரு ரவுடி கூட்டத்தை வைத்துக் கொண்டு பொதுமக்களுக்கு கடும் அச்சுறுத்தலாக வலம் வந்த தாதாமணி சுட்டுக் கொல்லப்பட்டதன் மூலம் கூலிப்படை வாழ்க்கை தான் கெத்து என்ற நினைப்பில் சுற்றிதிரியும் ரவுடிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே