பிரதமர் நரேந்திர மோடி இளமை காலத்தில் பணிபுரிந்ததாக கூறப்படும் வாட்நகர் டீக்கடை சுற்றுலாத்தலமாக மாறி வருகிறது.
குஜராத் மாநிலத்தின் வாட்நகர் ரயில் நிலையத்தில் உள்ள டீக்கடையில் தனது தந்தைக்கு உதவியாக சிறுவயதில் பணியாற்றியதாக பிரதமர் மோடி தனது பல்வேறு உரைகளில் மேற்கோள் காட்டியுள்ளார்.
இந்த நிலையில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் உள்ள மோடியின் ரசிகர்கள் அவர் பணிபுரிந்த டீக்கடையை காண ஆர்வத்துடன் அதிகளவில் வருகின்றனர். இதனால் வாட்நகரை சுற்றுலாத்தலமாக மாற்றும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.
அகமதாபாத்தில் இருந்து புகழ்பெற்ற அம்பாஜி கோயிலுக்கு செல்லும் வழியில் உள்ள வாட்நகர் ரயில்நிலையம் 8 கோடி ரூபாய் செலவில் சீரமைக்கப்பட்டு வருகிறது.
மேலும் பிரதமர் நரேந்திரமோடி குடும்பத்துக்கு சொந்தமான மரத்திலான டீக்கடையும் கண்ணாடி பெட்டிக்குள் வைத்து பழமை மாறாமல் பராமரிக்கப்பட்டு வருகிறது.
சமீபத்தில் குஜராத் வந்த மத்திய சுற்றுலா அமைச்சர் பிரகலாத் பட்டேல், பிரதமர் மோடியின் சொந்த ஊரான வாட்நகரில் ஆய்வு செய்து சுற்றுலாத் தலமாக மாற்றும் நடவடிக்கைகளை துரிதப்படுத்தியுள்ளார்.
ரயில் தடமும் விரிவுபடுத்தப்பட்டு புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதேபோல் வாரணாசி தொகுதியில் போட்டியிட தனக்கு உந்துசக்தியாக இருந்தது என்று பிரதமர் நரேந்திரமோடி கூறும் ஹடகேஸ்வர் மகாதேவ்(Hatakeshwar Mahadev) கோயில் சிவ பக்தர்களின் சுற்றுலா தேர்வாக உள்ளது.
மோடியின் வாரணாசி தொகுதியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலும் புது பொலிவு பெற்றுவருகிறது.