சர்வதேச தற்கொலை தடுப்பு நாள் இன்று கடைபிடிப்பு

சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்து கொள்பவர்களின் வீடியோக்களை பகிர்ந்து பிரபலப்படுத்தக் கூடாது என கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பக இயக்குநர் வலியுறுத்தியுள்ளார்.

சர்வதேச தற்கொலை தடுப்பு நாளானது இன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு  கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையில் ஓவியங்கள் தீட்டப்பட்டும், நாடகங்கள் நடத்தியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 

அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த கீழ்ப்பாக்கம் அரசு மன நல காப்பக இயக்குநர் பூர்ணசந்திரிகா, உலகில் ஒவ்வொரு 40 விநாடிக்கும் ஒருவர் தற்கொலை செய்து கொள்வதாக தெரிவித்தார்.

ஒருவர் தற்கொலை செய்து கொள்வதால், சராசரியாக அவரைச் சார்ந்த 135 பேர் பாதிப்படைவதாகக் கூறிய பூர்ணசந்திரிகா, பிரச்சனைகளுக்கு தற்கொலை ஒரு தீர்வல்ல என்றும் பணப்பிரச்சினை, குடும்பப்பிரச்சினை போன்றவற்றால் தற்கொலைக்கு முயல்வது மிகவும் தவறானது என அறிவுரை கூறினார்.

தற்கொலை செய்யப் போவதாக பெற்றோர் கூறுவதைக் கேட்டு பிற்காலத்தில் குழந்தைகளுக்கும் அதுபோல் தோன்றும் எனவும் அவர் அறிவுறுத்தினார்.

அரசு மனநலக் காப்பகங்களில் வாரம் முழுவதும் 24 மணிநேரமும் ஆலோசனைகள் வழங்கப்படுவதாகவும் பூர்ணசந்திரிகா குறிப்பிட்டார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே