கோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து..!

ஆந்திராவில் கோதாவரி ஆற்றில் சுற்றுலாப் படகு கவிழ்ந்த விபத்தில் 8 பேர் நீரில் மூழ்கி பலியாகினர். மாயமான 30 பேரைத் தேடும் பணியில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். 

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள கண்டிபோச்சம் கோவிலுக்குச் சென்ற சுற்றுலாப் பயணிகள், பாப்பிகொண்டலு என்ற பிரபல சுற்றுலாத் தலத்திற்குச் செல்ல முடிவு செய்தனர். அந்த இடத்திற்கு, கோதாவரி ஆற்றைக் கடந்து தான் செல்ல வேண்டும் என்பதால் ராயல் வசிஸ்டா என்ற சுற்றுலாப் படகில் அவர்கள் ஏறினர்.

படகோட்டி, மற்றும் ஊழியர்களைச் சேர்த்து மொத்தம் 62 பேர் அந்தப் படகில் சென்று கொண்டிருந்தனர். அப்போது ஆற்றில் விநாடிக்கு 5 லட்சத்து 13 ஆயிரம் கன அடி நீர் பாய்ந்து கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

தேவிப்பட்டினம் அருகே கச்சனூர் என்ற இடத்தில் படகு சென்ற போது ஆற்றில் கவிழ்ந்தது. குறிப்பிட்ட இடத்தில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு அதிகமானதாலும், நீரின் சுழற்சியாலும், அந்தப் படகு கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததாகச் சொல்லப்படுகிறது.

ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட அவர்களின் அலறல் சத்தம் கேட்டு பொதுமக்கள் திரண்டு போலீசுக்கு தகவல் தெரிவித்ததுடன், ஆற்றில் குதித்து சிலரை மீட்டனர்.

தேசிய பேரிடர் மீட்புப் படையின் தலா 30 வீரர்களைக் கொண்ட இரு குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.

இதுவரை 24 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 8 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்து விட்டதாகவும், மற்றவர்களைத் தேடும் பணி துரிதமாக நடைபெற்று வருவதாகவும் கிழக்கு கோதாவரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அட்னன் நயீம் அஸ்மி கூறியுள்ளார்.

சுற்றுலாத்துறையின் இரு படகுகளும், ஒரு ஹெலிகாப்டரும் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இச்சம்பவம் குறித்து அறிந்த ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, கோதாவரி ஆற்றில் இயக்கப்படும் அனைத்து படகுகளின் உரிமங்களையும் ரத்து செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும், தொகுதிக்குட்பட்ட அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள், மீட்புப் பணியை நேரில் சென்று பார்வையிட்டு, வேகப்படுத்த உத்தரவிட்டுள்ளார்.

ராயல் வசிஸ்டா படகானது உரிமம் பெறாமல் இயக்கப்பட்டு இருப்பதாக மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் முட்டம்செட்டி ஸ்ரீனிவாச ராவ் கூறியுள்ளார்.

இதனிடையே உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே