கேரளாவில் தென்மேற்கு பருவமழை முடிவுக்கு வந்து உள்ளதாக அந்த மாநில ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
கேரளாவில் வழக்கமாக தென்மேற்கு பருவமழை ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 1-ந்தேதி தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு ஒரு வாரம் தாமதமாக தென்மேற்கு பருவமழை தொடங்கியது. ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் அதிக மழை பெய்தது.
இதன் காரணமாக மாநிலத்தின் பல பகுதிகளில் வெள்ள சேதம் ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்றுடன் தென்மேற்கு பருவமழை கேரளாவில் முடிந்துவிட்டதாக கொச்சி வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மேலும் நடப்பு ஆண்டில் தென்மேற்கு பருவமழை கேரளாவில் இயல்பை காட்டிலும் 14 சதவீதம் அதிக பெய்து உள்ளது என்றும் அந்த மையம் கூறியுள்ளது.
மேலும் தற்போது உள்ள நிலவரப்படி இந்த மாதம் 2-வது வாரம்தான் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளது என்றும் அந்த மையம் தெரிவித்துள்ளது.