கேரளாவில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக 12 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சசரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில், மலையோர கிராமங்களில் கனமழை பெய்து வருகிறது.
இதனால் மலை கிராமங்களில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதால் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல வேண்டும் எனவும் இரவு நேர பயணங்களை தவிர்க்க வேண்டும் எனவும் அம்மாநில அரசு எச்சரித்துள்ளது.
இந்த நிலையில் வங்க கடல் பகுதியான ஆந்திர கடலில் குறைந்த காற்றழுத்தம் காரணமாக கேரளாவில் மீண்டும் கனமழை பெய்து வருகிறது.
இதில் இடுக்கி, பாலக்காடு, மலப்புரம், வயநாடு, கோழிக்கோடு, காசர்கோடு உள்ளிட்ட 12 மாவட்டங்களில், மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரித்த இந்திய வானிலை ஆய்வு மையம் 12 மாவட்டங்களுக்கும் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மஞ்சள் எச்சரிக்கை என்பது அத்தியாவசிப் பொருட்களை சேகரித்து வைத்துக் கொண்டு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று விடுக்கப்படும் முன்னெச்சரிக்கையாகும்.
அதேபோல் கேரள கடலிலும் பலத்த காற்று வீசி அலைகள் சீற்றத்துடன் காணப்படும் என்பதால் மீனவர்கள் எச்சரிக்கையுடன் கடலுக்கு செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.