டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் நந்தகுமார் மற்றும் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சுதன் ஆகியோர் சென்னை பாரிமுனையில் உள்ள டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தில் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
குரூப் 2 பதவிகளுக்கு ஏற்கனவே எழுத்து தேர்வு உள்ள நிலையில் குரூப் 2 ஏ பிரிவுக்கும் எழுத்து தேர்வு கொண்டுவரப்பட்டதாக நந்தகுமார் தெரிவித்தார்.
இந்நிலையில் தேர்வை எதிர்கொள்வதில் மாணவர்களுக்கு சிரமம் ஏற்படக் கூடாது என்பதற்காக 6-ஆம் வகுப்பு முதல் அவர்கள் படித்த பாடத்திட்டம் சார்ந்தே புதிய பாடத் திட்டமும் தேர்வுக் கேள்விகளும் அமைந்திருப்பதாகவும் அவர் கூறினார்.
பள்ளி கல்லூரிகளில் படித்த பாடங்கள் சார்ந்து, முன் தயாரிப்பின்றி எதிர்கொள்ளும் வகையில் மொழி பெயர்ப்பு, கட்டுரை சுருக்கி எழுதுதல், குறிப்புகளை வைத்துக் கொண்டு எழுதுதல் என்ற ரீதியிலேயே பாடத் திட்டமும், தேர்வு முறையும் அமைந்திருப்பதாக அவர் தெரிவித்தார்.
முன்பு பொது அறிவு, பொது ஆங்கிலம், பொதுத் தமிழ் ஆகிய மூன்று வாய்ப்புகள் இருந்த நிலையில் தமிழைத் தவிர மற்ற இரு வாய்ப்புகள் மூலம் கடைசித் தேர்வு வரை தேர்வு பெறும் இருந்த நிலை மாறி தற்போது தமிழ் தெரியாமல் தேர்வு பெறுவதை தடுக்கும் வகையில் புதிய பாடத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
அந்த வகையில் தேர்ச்சி பெற தமிழக வரலாறு, பண்பாடு, சங்க இலக்கியம், திருக்குறள் உள்ளிட்டவை பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாக நந்தகுமார் தெரிவித்தார்.
2020-ஆம் ஆண்டுக்கான டி.என்.பி.எஸ்.சி. தேர்வு அட்டவணை ஒரு மாதத்தில் வெளியாகும் என்று நந்தகுமார் கூறினார்.
டி.என்.பி.எஸ்.சி தேர்வில் ஆள்மாறாட்டம் நடைபெற வாய்ப்பில்லை என்றும், இதுவரை அதுபோன்று நடந்தது இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
முன்பு தேர்வில் 8 தொகுதிகள் இருந்ததாகவும் தற்போது தமிழ் கலாச்சாரம் பண்பாடு மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் என கூடுதலாக இரண்டு தொகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், டி.என்.பி.எஸ்.சி. தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சுதன் தெரிவித்தார்.
முன் தயாரிப்பின்றி எழுதும் வகையில் தேர்வு முறை அமைந்திருந்தாலும் மாணவர்களுக்கு போதிய அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
குரூப் 4 தேர்வில் தவறுகள் இருந்த கேள்விக்கு பதில் அளித்த அவர், அது தொடர்பாக வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் குழுவின் அறிக்கை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.