கீழடி, முதல் 3 அகழாய்வு முடிவுகளும் விரைவில் வெளியீடு – அமைச்சர் பாண்டியராஜன்

கீழடியில் மேற்கொள்ளப்பட்ட முதல் 3 அகழாய்வு முடிவுகளும் விரைவில் வெளியிடப்படும் என்று தமிழ்வளர்ச்சி துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

தோல்துறை திறன் கழகம் சார்பில் முறைசாரா பணியாளர்களுக்கும்,  “முன் கற்றலுக்கு அங்கீகாரம்” திட்டத்தில் பயின்றவர்களுக்கும் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில்  மத்திய திறன்மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் துறை  அமைச்சர் மகேந்திரநாத் பாண்டே, தமிழ்வளர்ச்சி துறை அமைச்சர் பாண்டியராஜன் ஆகியோர் பங்கேற்றனர். பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது சாலையோரங்களில் காலணி தைக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் முன்னேற்றத்திற்கு புதிய திட்டம் ஒன்றை மத்திய அரசு கொண்டு வர இருப்பதாக மகேந்திரநாத் பாண்டே தெரிவித்தார்.

மத்திய புழல் சிறையில் கைதிகள் தோல் தொழில் செய்யும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் கைதிகளுக்கு 140 ரூபாய் வரை வருமானம் கிடைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தோல் தொழில் துறை மூலம் அடுத்த 5 ஆண்டுகளில் 20 லட்சம் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் மகேந்திரநாத் பாண்டே கூறினார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் பாண்டியராஜன், கீழடியில் மேற்கொள்ளப்பட்ட முதல் 3 அகழாய்வு முடிவுகளை பெற டெல்லி செல்ல இருப்பதாகவும், அந்த 3 அகழாய்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என்றார்.

தொல்லியல் துறைக்கென தனி தொலைநோக்குப் பார்வை திட்டம் தயாராகிக் கொண்டிருப்பதாகவும், அதில் தொல்லியல் துறை சார்பில் கண்டுபிடிக்கப்பட்ட தகவல், புதியதாய் தோண்டப்பட உள்ள இடங்கள் குறித்து முழுமையான தகவல்கள் இடம்பெறும் என்று பாண்டியராஜன் கூறினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே