காஷ்மீருக்கு ஆதரவாக பிரமாண்ட பொதுக்கூட்டம் என இம்ரான்கான் அறிவிப்பு

காஷ்மீருக்கு ஆதரவாக, ஆக்கிரமிப்பு காஷ்மீரிலுள்ள முசாபர்பாத்தில் பிரம்மாண்ட கூட்டம் நடத்தப்போவதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அறிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு, எதிர்ப்பு தெரிவித்து வரும் பாகிஸ்தான், இந்த விவகாரத்தில் உலக நாடுகளின் ஆதரவைப்பெற முயன்று தோல்வியைத் தழுவியது.

இதனைத் தொடர்ந்து, அண்மையில், காஷ்மீர் மக்களுக்கு ஆதரவு என்ற பெயரில், பாகிஸ்தானில் காஷ்மீர் ஹவர் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

இதற்கு அந்நாட்டு மக்களே போதிய ஆதரவு அளிக்காமல் காஷ்மீர் ஹவர் பிரச்சாரம் தோல்வியை சந்தித்தது. இந்த நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், வரும் 13 ஆம் தேதி முசாபர்பாத்தில் காஷ்மீருக்கு ஆதரவான பிரம்மாண்ட கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

காஷ்மீரில் இந்திய படைகள் தொடர்ந்து ஆக்கிரமிப்பில் ஈடுபட்டுள்ளதாகவும், எனவே, எந்த தயக்கமும் இன்றி காஷ்மீர் மக்களுக்கு ஆதரவாக இருக்கிறோம் என்பதை காட்டவேண்டும் எனவும் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள முசாபர்பாத்தில் இந்த நிகழ்வு நடைபெற உள்ளது.

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஏராளமான அடக்குமுறைகளும் மனித உரிமை மீறல்களும் பாகிஸ்தான் ராணுவத்தினரால் மேற்கொள்ளப்படுவதாக அங்குள்ள மக்கள் போராட்டம் நடத்தும் நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் அறிவிப்பு சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சனத்தை சந்தித்து வருகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே