காபி கழிவுகளில் உருவாக்கப்படும் குளிர் கண்ணாடிகள்

உக்ரைனில் காபி கழிவுகளைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள குளிர் கண்ணாடிகள், பயனாளிகளுக்கு காபி நறுமணத்தை தருகிறது.

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பொருட்டு ஒச்சிஸ் காபி நிறுவன சி.இ.ஓ. மக்ஸிம் ஹவ்ரிலென்கோ இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளார். ஒளியியல் வல்லுநர்கள் குடும்பத்தில் இருந்து வந்துள்ள மக்ஸிம், கண்பார்வை தொடர்பான பணியில் 15 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர்.

காபி கழிவுகளை மறுசுழற்சி செய்து அறைகலன்கள், கோப்பை, அச்சடிக்கும் மை, உயிரி எரிபொருள் உள்ளிட்ட பொருட்கள் இதற்கு முன்பு உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால் இவற்றையெல்லாம் பின்னுக்குதள்ளும் வகையில் காபி நறுமணத்துடன் கூடிய குளிர் கண்ணாடியை மக்ஸிம் உருவாக்கியுள்ளார்.இது வெற்றியடைவதற்கு முன்பு புதினா, கொத்தமல்லி, ஏலக்காய் உள்ளிட்ட மூலிகைப்பொருட்களை கொண்டும் சோதனை செய்துள்ளார்.  காபியின் நிறம் கருப்பு இருப்பதாலும் அதிக அளவில் காபி உற்பத்தி செய்யப்படுவதாலும் இந்த யோசனை வந்ததாக அவர் தெரிவிக்கிறார்.

300 மாதிரிகள் வீணானதன் பிறகே சரியான குளிர் கண்ணாடி உருவாக்கப்பட்டது என்றும் ஒன்றின் விலை தற்போது 6 ஆயிரம் ரூபாயாக உள்ளது என்றும் மக்ஸிம் கூறுகிறார். காய்கறி எண்ணெயால் ஒட்டப்பட்டுள்ள இந்த காபி கண்ணாடிகளின் முக்கிய சிறப்புகளில் ஒன்று தூக்கி எறிப்பட்டப்பின் 10 ஆண்டுகளில் மண்ணுக்கு உரமாகிவிடும்.

இந்த கண்ணாடிக்கு வாடிக்கையாளர்கள்  அமெரிக்கா, மேற்கு ஐரோப்பா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா என்று பரவிக்கிடப்பதாகவும், 10 சதவீதத்தினர் மட்டுமே உக்ரைனைச் சேர்ந்தவர்கள் என்று மக்ஸிம் கூறிகிறார்.சுத்தமான பொருட்களை உருவாக்குவதும் கழிவுகளை அகற்றுவதுமே தங்கள் நோக்கம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த கண்ணாடி இந்திய மதிப்பில் 5 ஆயிரம் ரூபாய் முதல் 6 ஆயிரம் ரூபாய் வரை விற்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே