கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே காதல் விவகாரத்தால் தேமுதிக பிரமுகர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறிஞ்சிப்பாடியை அடுத்த வெங்கடாம்பேட்டை பகுதியை சேர்ந்த ஜனார்த்தனன் என்பவர், தேமுதிகவில் பகுதி இளைஞரணி செயலாளராக இருந்து வந்துள்ளார்.
இவர் வெங்கடாம்பேட்டை அடுத்த சத்திரம் பகுதியை சேர்ந்த ஆனந்தராஜ் என்பவரின் தங்கையை காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
காதல் விவகாரம் ஆனந்தராஜுக்கு தெரிய வர அவர் பலமுறை ஜனார்த்தனை கண்டித்ததாக தெரிகிறது. ஆனால் ஜனார்த்தனன் ஆனந்தராஜின் பேச்சுக்கு கட்டுப்படாமல் தொடர்ந்து அவரது தங்கையை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த ஆனந்தராஜ், அவரது நண்பர்கள் சிலரை சேர்த்துக் கொண்டு, வெங்கடாம்பேட்டை பகுதிக்குச் சென்றுள்ளார். அப்போது வெளியூர் சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்த ஜனார்த்தனனை, ஆனந்தராஜ் உள்ளிட்ட கும்பல் வழிமறித்து சரமாரியாக வெட்டி விட்டு தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
இதில் பலத்த காயமடைந்த ஜனார்த்தனன் குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முதலுதவி அளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ஜனார்த்தனன் உயிரிழந்தார். கொலை குறித்து குறிஞ்சிப்பாடி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.