கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொள்ளப்போவதாக ஆடியோ வெளியீடு

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ உடற்கல்வியியல் கல்லூரி முதல்வர் மீது, பொய்யான பாலியல் புகார் கொடுக்க பெண் பேராசியரும், வார்டனும் தொந்தரவு தருவதாகக் கூறி மாணவி தற்கொலை செய்து கொள்ளப்போவதாக ஆடியோ வெளியிட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ உடற்கல்வியியல் கல்லூரியில் முதல்வராக ஜார்ஜ் வில்லியம்ஸ் பணியாற்றுகிறார்.

மாணவ, மாணவிகள் இரு பாலரும் படிக்கும் இந்த கல்லூரியில், இன்று திடீரென 50-க்கும்  மேற்பட்ட மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவி ஒருவரை, கல்லூரியின் பேராசிரியரான ஜோதி, விடுதி வார்டன் ஷெர்லி தொந்தரவு செய்வதாக கூறி மாணவர்கள் இந்த போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட மாணவி, இது தொடர்பாக ஆடியோ ஒன்றினை வெளியிட்டு தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக தெரிவித்ததை அடுத்து தான் மாணவர்கள் இந்த போரட்டத்தில் இறங்கியுள்ளனர்.

கல்லூரி முதல்வர் ஜார்ஜ் வில்லியம்ஸ் மீது பொய்யான பாலியல் புகார் கொடுக்கச் சொல்லி, பெண் பேராசிரியரும், வார்டனும் தன்னை மிரட்டுவதாக அந்த மாணவி அழுது கொண்டே கூறியுள்ளார்.

கடந்த ஒரு மாதமாக தொடரும் இந்த தொல்லையால், தான் மனஉளைச்சலுக்கு உள்ளாகியிருப்பதாகவும் அந்த மாணவி தெரிவித்துள்ளார்.

கல்லூரி முதல்வரின் மீதுள்ள தனிப்பட்ட காழ்புணர்ச்சியால் பேராசிரியர் ஜோதியும், வார்டன் ஷெர்லியும் இவ்வாறு நடந்து கொள்வதாக மாணவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்த விவகாரத்தில் காவல்துறை தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமென போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே