கர்நாடக காங். மூத்த தலைவர் டி.கே.சிவக்குமார் திடீர் கைது

கர்நாடக மாநிலத்தின் முன்னாள் அமைச்சரும் அம்மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான டி.கே.சிவகுமார் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

சட்டவிரோத பணபரிமாற்றம் செய்த குற்றச்சாட்டின் பேரில் டி.கே. சிவகுமார் டெல்லியில் நேற்று இரவு கைது செய்துள்ளனர். சிவகுமாரின் வீடு மற்றும் அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனையைத் தொடர்ந்து அவரிடம் டெல்லியில் விசாரணை நடத்தப்பட்டது. இதை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.

சிவகுமார் போலியான நிறுவனங்கள் பெயரில் அதிக அளவில் நிதி முறைகேடு செய்துள்ளது ஆதாரங்கள் மூலமாக தெரிய வந்துள்ளதாகவும் ஆனால் இது பற்றிய விசாரணைக்கு அவர் ஒத்துழைக்காத காரணத்தால் கைது செய்ய நேரிட்டது என்றும் அமலாக்கத் துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

சிவகுமாரை கைது செய்து அழைத்துச் செல்கையில் காங்கிரஸ் தொண்டர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து தடுக்க முயன்றனர். அப்போது லேசான தள்ளு முள்ளு ஏற்பட்டது.

இதற்கிடையில் கைதானதை தொடர்ந்து சிவக்குமார் ட்விட்டரில் பதிவு ஒன்றை பதிவிட்டு இருந்தார். தன்னை கைது செய்யும் நீண்ட நாள் திட்டத்தை நிறைவேற்றிக்கொண்ட பாஜகவினரை பாராட்டுவதாக சிவக்குமார் தெரிவித்துள்ளார். அதே சமயம் தன்மீது தொடுக்கப்பட்ட வழக்குகள் அனைத்தும் அரசியல் பழிவாங்கும் நோக்கத்தில் பாஜக அரசால் போடப்பட்டது என்று கூறியுள்ளார்.

இந்தியா மோசமான பொருளாதார சிக்கலில் தவித்து வரும் நிலையில், அதில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காகவும், சிவகுமாரை பழிவாங்கும் நோக்கிலும் இந்த நடவடிக்கையை பாஜக அரசு மேற்கொண்டுள்ளதாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார்.

வரி ஏய்ப்பு மற்றும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புக்கு சட்டவிரோத பண பரிமாற்ற புகாரில் வருமான வரித்துறையும் ஏற்கனவே சிவகுமார் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

சிவக்குமார் கர்நாடக அமைச்சராக இருந்தபோது டெல்லி வீடு மற்றும் கர்நாடகாவில் உள்ள அவரது வீடு மற்றும் உறவினர்கள் வீடு என மொத்தம் 84 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது.

டெல்லியிலுள்ள சிவக்குமாரின் வீட்டிலிருந்து 8 கோடியே 50 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த பணம் ஹவாலா பணம் என்று அமலாக்க பிரிவு போலீசார் உறுதி செய்திருந்தனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே