தமிழ் திரைப்பட உலகில் பல முன்னணி கதாநாயகர்களை வைத்து மிகப்பெரிய பட்ஜெட்டில் படம் தயாரித்த நிறுவனம் லைகா. இந்த நிறுவனத்தின் ஆலோசகராக இலங்கை தமிழரான கருணா மூர்த்தி செயல்பட்டார்.
லைகா நிறுவனத்தின் பொறுப்புகளில் இருந்து சமீபத்தில் விடுவிக்கப்பட்ட கருணாமூர்த்தி மீது அந்த நிறுவனத்தின் சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அந்த புகாரில் லைகா ஆலோசகராக கடந்த 2013ம் ஆண்டு முதல் இருந்து வந்த கருணாமூர்த்தி, தன்னிச்சையாக செயல்பட்டு கோடிக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாகவும், படத் தயாரிப்பு, நிதி நிர்வாகங்களில் தலையிட்டு பண மோசடி செய்திருப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
லைகா தயாரிப்பில் விஜய் நடித்த கத்தி மற்றும் கோலமாவு கோகிலா போன்ற படங்களின் வெளிநாட்டு உரிமை, சாட்டிலைட் உரிமை போன்றவற்றை அனுமதியில்லாமல் தனது ஐங்கரன் நிறுவனம் மூலம் விற்று 90 கோடி ரூபாய் கையாடல் செய்திருப்பதாகவும் புகாரில் லைகா நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
மேலும், சிம்பு நடித்த வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தை கருணாமூர்த்தி தன்னிச்சையாக செயல்பட்டு தயாரித்து பெரும் இழப்பை ஏற்படுத்தியதாகவும், அவ்வாறே கமல் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் – 2 படத்தை அனுமதியில்லாமல் தயாரித்து பெரும் இழப்பை ஏற்படுத்தியதால் அந்த படத்தின் தயாரிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் புகாரில் கூறப்பட்டுள்ளது.
இவ்வாறாக 120 கோடி ரூபாய் வரை பல்வேறு வகையில் கையாடலும், 60 கோடி ரூபாய்க்கும் மேல் இழப்பும் ஏற்படுத்திய கருணாமூர்த்தி மீதும், உடந்தையாக இருந்த ஊழியர் பானு என்பவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென புகாரில் லைகா நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.
இந்த புகார் குறித்து ஐங்கரன் கருணாமூர்த்தி தரப்பில் விளக்கம் கேட்க முயற்சி எடுக்கப்பட்டது. ஆனால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை.