கடந்த இரு ஆண்டுகளில் மட்டும் 2,400 ஐஐடி மாணவர்கள், தங்களது கல்வியை பாதியிலேயே நிறுத்தி விட்டதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அதில் பெரும்பாலானோர், முதுகலைப் பட்டம் பயின்று கொண்டிருந்தவர்கள் என்ற அதிர்ச்சித் தகவலும் வெளியானது.
ஐஐடிக்களில் இடைநிற்றலைத் தவிர்க்கவும், எம்.டெக் கல்வி அமைப்பில் தேவையான சீர்திருத்தங்களைக் கொண்டு வரவும் 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
அந்தக் குழு தனது பரிந்துரைகளை அண்மையில், மனித வள மேம்பாட்டு அமைச்சகத்திடம் சமர்பித்தது.
அதன் அடிப்படையில், மனித வள மேம்பாட்டு அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தலைமையில், ஐ.ஐ.டி. கவுன்சில் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது.
அந்தக் கூட்டத்தில் எம்.டெக் படிப்புக்கான கல்விக்கட்டணத்தை 10 மடங்கு வரை உயர்த்த முடிவு செய்யப்பட்டது.
பி.டெக் படிப்புக்கு ஆண்டுக்கு 2 லட்சம் ரூபாய் ஐஐடிக்களில் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அதற்கு இணையாக எம்.டெக் படிப்புக்கு கட்டணம் நிர்ணயிக்க தற்போது முடிவெடுக்கப்பட்டுள்ளது.
மேலும் கேட் தேர்வு எழுதி அதன் மூலம் எம்.டெக் படிப்பில் சேர்ந்தவர்களுக்கான மாத உதவித் தொகை 12 ஆயிரத்து 400 ரூபாயையும் நிறுத்த ஐஐடி கவுன்சில் முடிவு செய்துள்ளது.
இது மட்டுமல்லாது ஐஐடிக்களில் பணிபுரியும் பேராசிரியர்களின் தரம் மதிப்பிடப்படவுள்ளது. பணியில் சேர்ந்தது முதல் ஐந்தரை ஆண்டுகள் வரை, ஒரு பேராசிரியர் எப்படி பணிபுரிந்துள்ளார் என்பது ஆராயப்படவுள்ளது. அதன்படி, அவர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படும்.
சரியாக பணிபுரியாவிட்டால், பணிநீக்கம் செய்யப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாற்றங்கள் அனைத்தும் 2020 கல்வி ஆண்டு தொடங்கி 3 ஆண்டுகளில் படிப்படியாக கொண்டு வரப்படவுள்ளன. இந்த மாற்றங்கள் மூலம் கிடைக்கும் கூடுதல் நிதியால், ஐஐடிக்களில் கல்வி மற்றும் ஆராய்ச்சி தரம் மேம்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
சென்னை ஐ.ஐ.டி.யைப் பொறுத்தவரை எம்.டெக் படிப்புக்கு முதல் பருவத்திற்கு, 8,750 ரூபாயும், அடுத்தடுத்த பருவங்களுக்கு 5,000 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.