சென்னை தேனாம்பேட்டையில் நடைபெற்ற உயர்கல்வி மேம்பாடு குறித்த கருத்தரங்கில் அகில இந்திய தொழில் நுட்பக் கல்விக்குழு தலைவர் அனில் சஹஸ்ரபுதே பங்கேற்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பொறியியல் கல்லூரிகளில் பேராசிரியராக பணியாற்ற முதுநிலை பொறியியல் படிப்புகளான எம்.இ., எம்.டெக்கை முடித்திருந்தாலே போதுமானது என்ற விதிமுறையில் மாற்றம் கொண்டுவரப்பட்டு உள்ளதாகத் தெரிவித்தார்.
புதிய விதிகளின் படி எம்.இ., எம்.டெக் படிப்புகளுக்குப் பிறகு அகில இந்திய தொழில் நுட்பக் கல்விக்குழு அறிமுகப்படுத்தியுள்ள 8 Module Course என்ற ஓராண்டு சிறப்புப் படிப்பை முடித்து தேர்ச்சி பெற்றால் மட்டுமே பொறியியல் கல்லூரிகளில் பேராசிரியராகப் பணியாற்ற முடியும் என்று அவர் கூறினார்.
பல்கலைக்கழகங்கள், அரசு பொறியியல் கல்லூரிகள், அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகள், தொழில்நுட்ப நிறுவனங்களில் ஏற்கனவே பேராசிரியராக பணியாற்றுவோரும் புதிய சிறப்புப் படிப்பை படித்தால் மட்டுமே பேராசிரியராக தொடர்ந்து பணியாற்ற அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
பொறியியல் படிப்பின் தரத்தை உயர்த்தவும், மாணவர்களின் கற்றல் திறனை அதிகரிக்கவும், புதுமையான முறையில் கற்பிக்கவும் ஏதுவாக புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளதாக அவர் கூறினார்.
பொறியியல் கல்வியில் புதுமையான பாடப்பிரிவுகளை அறிமுகப்படுத்தும் முயற்சியின் முதல் கட்டமாக அடுத்த கல்வியாண்டு முதல் B.Tech., பிரிவில் ஆர்ட்டிபிஷியல் இண்டலிஜென்ஸ் எனப்படும் செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் பாடப்பிரிவு அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகவும் அனில் சஹஸ்ரபுதே தெரிவித்தார்.