“என்னைப் பற்றிய செய்திகளுக்கு கருத்து தெரிவிக்க விரும்பவில்லை” – தஹில்ரமானி

தன்னைப் பற்றிய செய்திகள் குறித்து கருத்து கூற விரும்பவில்லை என்று சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி தஹில்ரமானி தெரிவித்திருக்கிறார்.

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த தஹில்ரமானி கடந்த ஆகஸ்ட் மாதம் 28ஆம் தேதி மேகாலயா உயர் நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற அவரது கோரிக்கையை கொலிஜியம் ஏற்க மறுத்துவிட்டது.

இதைத் தொடர்ந்து கடந்த மாதம் ஆறாம் தேதி தஹில்ரமானி தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இந்நிலையில் அவர் சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பில் இரண்டு வீடுகள் வாங்கியது குறித்தும், பதவியில் இருந்தபோது நிர்வாக ரீதியாக எடுத்த முடிவுகள் குறித்தும் விசாரிக்க வேண்டி இருப்பதாக சிபிஐ அறிக்கை தாக்கல் செய்து உள்ளது.

அதை ஏற்று விசாரணை நடத்த சிபிஐக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அனுமதி அளித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

இது தொடர்பாக ஆங்கில நாளிதழின் சார்பில் நீதிபதியை தொடர்பு கொண்டபோது, இதற்கு முன்பும் தன்னைப் பற்றிய தகவல்களுக்கு கருத்து தெரிவிக்காதது போலவே இப்போதும் அமைதிக் காக்கவே விரும்புவதாக அவர் கூறியுள்ளார்.

எதைப் பற்றியும் விவாதிக்க விரும்பவில்லை என்றும் தஹில்ரமானி கூறியிருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே