ஊழியர்களுக்கு விடுமுறை அறிவித்த ‘அசோக் லேலண்ட்’ நிறுவனம்!

ஊழியர்களுக்கு 5 நாள்கள் விடுமுறை அளித்தது அசோக் லேலண்ட்.

நாட்டில் நிலவும் பொருளாதார மந்தநிலை காரணமாக வாகன விற்பனை கடும் சரிவை சந்தித்து வருகிறது. இதனால் ஆட்டோமொபைல் தொழில் நிறுவனங்கள் கடும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டதோடு, வாகன உற்பத்தியையும் நாளுக்கு நாள் குறைத்து வருகின்றனர்.

மேலும் ஆட்டோமொபைல் தொழில் சார்ந்த உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளும் உற்பத்தியை குறைத்துள்ளனர். அதன் தொடர்ச்சியாக ஊழியர்களுக்கு விடுமுறையும் அளித்து வருகின்றனர். இதன் காரணமாக லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.

இந்தியாவில் கார் உற்பத்தியில் முன்னணியில் உள்ள நிறுவனங்களான ஹூண்டாய் நிறுவனம், மாருதி நிறுவனம், டிவிஎஸ் நிறுவனம்  உள்ளிட்ட நிறுவனங்கள் ஊழியர்களுக்கு விடுமுறை அளித்தும்,அவ்வப்போது தொழிற்சாலையில் உற்பத்தியை நிறுத்தி வருகின்றனர்.

இந்த வரிசையில் உலக அளவிலும், இந்திய அளவிலும் கனரக வாகனங்கள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள ‘அசோக் லேலண்ட்’ நிறுவனம் சென்னை எண்ணுரில் உள்ளது. இந்த  நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு இன்று முதல் (செப்டம்பர் 6 ஆம் தேதி) ஐந்து நாட்களுக்கு விடுமுறை என ‘அசோக் லேலண்ட்’ நிறுவனம் அறிவித்துள்ளது.

அதன்படி செப்டம்பர் 6,7,9,10,11 ஆகிய தேதிகளில் நிறுவனத்தில் எந்தவித பணிகளும் நடைபெறாது. எனவே ஊழியர்கள் இந்நாட்களில் பணிக்கு வர வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது. அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் வாகன விற்பனை மந்தநிலை காரணமாக சில முக்கிய முடிவுகள் எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது. 

இந்தியாவில் உள்ள முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்கள், இத்தகைய நடவடிக்கையை தொடர்ந்தால் நாட்டில் வேலை இழப்பு அதிகரிக்கும் என ஊழியர்கள் அச்சப்படுகின்றனர். தற்போது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், பொருளாதாரத்தை மீட்டெடுக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. 

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே