கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான சித்தராமையா தனது உதவியாளர் ஒருவரின் கன்னத்தில் அறையும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
கர்நாடக காங்கிரஸ் தலைவரும், மாநில முன்னாள் முதலமைச்சருமான சித்தராமையா இன்று தனது உதவியாளர்களுடன் மைசூர் விமான நிலையம் வந்திருந்தார்.
விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து விட்டு வெளியே சென்றபோது, அவரது உதவியாளர் ஒருவர், செல்போனை சித்தராமையாவின் காதின் அருகே கொண்டு சென்று, ‘ஒரு அதிகாரி இணைப்பில் இருக்கிறார். அவர் உங்களுடன் பேச வேண்டுமாம்’ எனக் கூறி உள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த சித்தராமையா, உதவியாளரின் கன்னத்தில் பளார் என அறை விட்டு, அங்கிருந்து செல்லும்படி விரட்டினார். பொது இடத்தில் அவர் நடந்துகொண்ட விதம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அவர் உதவியாளரை தாக்கும் வீடியோ காட்சிகள் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
இதேபோல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, உள்ளூர் எம்எல்ஏ மீது புகார் கூறிய காங்கிரஸ் பெண் தொண்டர் ஒருவரை அதட்டி, அவரிடம் இருந்து மைக்கை பிடுங்கினார். அப்போது அந்த பெண்ணின் துப்பட்டாவும் சேர்ந்து கையோடு வந்துவிட்டது. இந்த செயலும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அவரை மகாபாரதத்தில் வரும் துச்சாதனன் போன்றவர் என பாஜக விமர்சனம் செய்தது குறிப்பிடத்தக்கது.