இ-சிகரெட் விற்றால் ஒரு வருடம் சிறை தண்டனை விதிக்கும் அவசர சட்டம்

இ-சிகரெட் விற்றால் ஒரு வருடம் சிறை தண்டனை விதிக்கும் வரைவு அவசர சட்டம் அமைச்சர்கள் குழுவின் பரிசீலனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

புகையிலை, சிகரெட்டுக்கு மாற்றாக சில நாடுகளில் இ-சிகரெட் என்று கூறப்படும் மின்னணு சிகரெட்டுகள் பயன்படுத்தப்படுகிறது. இதுவும் உடல் நலத்திற்கு கேடு என்பதால் இதனை தடை செய்வதற்காக மத்திய சுகாதார அமைச்சகம் ஒரு வரைவு அவசர சட்டத்தை தயாரித்துள்ளது. அதன்படி இ-சிகரெட் உற்பத்தி செய்யவும், இறக்குமதி செய்யவும், விநியோகம் மற்றும் விற்க செய்யவும் தடை விதிக்கப்படுகிறது. இதனை முதன் முறையாக மீறுபவர்களுக்கு அதிகபட்சம் ஒரு வருட சிறை தண்டனையும் ஒரு லட்சம் அபராதமும் விதிக்கப்படும். மீண்டும் தடையை மீறினால் மூன்று வருட சிறை தண்டனை 5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

இந்த வரைவு சட்டம் பிரதமர் அலுவலகம் உத்தரவின் பெயரில் மத்திய அமைச்சர்கள் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அவர்கள் இந்த சட்டத்தில் உள்ள பல்வேறு அம்சங்கள் குறித்து பரிசீலித்து வருகிறார்கள். இந்த அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டால் அடுத்து நாடாளுமன்ற கூட்டத்தில் இதற்கான சட்ட மசோதா தாக்கல் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே