இஸ்லாம் மதத்துக்கு மாறியவருக்கு பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் சான்றிதழ் மறுப்பு

இஸ்லாம் மதத்தில் எந்த பிரிவுக்கு மாறினார் என்பதை தெரிவிக்காதவருக்கு பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான சான்றிதழை பெற உரிமை இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றத்தை சேர்ந்த ரில்வான், ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை மணந்து இருவரும் இந்து மதத்திலிருந்து இஸ்லாமிய மதத்திற்கு மாறினர். தொடர்ந்து பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்பதற்கான சான்றிதழ் கோரி திருக்கழுக்குன்றம் வட்டாட்சியரை அணுகினர்.

அவரது விண்ணப்பத்தை வட்டாட்சியர் நிராகரித்த நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ரில்வான் வழக்கு தொடர்ந்தார். விசாரணையின் போது இஸ்லாம் மதத்திற்கு மாறிய மனுதாரர் அதில் எந்த பிரிவில் சேர்ந்துள்ளார் என்பதை தெரிவிக்காததால் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான சான்றிதழ் வழங்க முடியாது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் இஸ்லாம் மதத்தில் எந்த பிரிவினருக்கு மாறினார் என்பதை மனதாரர் தெரிவிக்காததால் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான சான்றிதழை பெற அவருக்கு உரிமை இல்லை எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே