இன்று இந்தி மொழி நாள் – அமித்ஷா

உலக அரங்கில் இந்தியாவின் அடையாளமாக ஒரு மொழி இருப்பது மிகவும் முக்கியம் என்று கூறியுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பரவலாகப் பேசப்படும் இந்தி மொழியால்தான் நாட்டை ஒற்றுமைப்படுத்த முடியும் என்று தெரிவித்துள்ளார்.

அரசமைப்புச் சட்டத்தின் 8ஆவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள 22 மொழிகளில் இந்தியும், இதேபோல ஆங்கிலமும் மத்திய அரசு நிலையில் அலுவல் மொழிகளாக உள்ளன.

அரசமைப்பு சட்டத்தின் 343ஆவது பிரிவின் கீழ், மத்திய அரசின் அலுவல் மொழியாக இந்தி உள்ளது.

தேவநாகரி எழுத்து வடிவில் எழுதப்படும் இந்தி, மத்திய அரசின் அலுவல் மொழியாக, அரசியல் நிர்ணய சபையால், 1949ஆம் ஆண்டு செப்டம்பர் 14ஆம் தேதி ஏற்கப்பட்டது. இதைக் குறிக்கும் வகையில், செப்டம்பர் 14 ஆம் தேதி இந்தி மொழி நாளாக மத்திய அரசால் கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்தியை பரப்பும் வகையில் மத்திய அரசு இந்த நாளை கொண்டாடுகிறது. இந்தியில் வெளியாகும் கலை, இலக்கியப் படைப்புகளில் சிறந்தவற்றை தேர்ந்தெடுத்து பரிசுகள், இந்தியை சிறப்பிப்போருக்கு விருதுகளும் வழங்கப்படுகின்றன.

இந்நிலையில், இந்தி மொழி நாளை முன்னிட்டு, ட்விட்டரில் பதிவிட்டுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இந்தியா பல்வேறு மொழிகளை கொண்ட நாடு என்றும், ஒவ்வொரு மொழியும் அதற்கே உரிய முக்கியத்துவத்தை கொண்டவை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், உலக அரங்கில் இந்தியாவின் அடையாளமாக ஒரு மொழி இருப்பது மிகவும் முக்கியம் என்றும், ஒரு மொழியால் நாட்டை ஒற்றுமைப்படுத்த முடியும் என்றால், அது பரவலாகப் பேசப்படும் இந்தி மொழிதான் என்றும் அவர் கூறியுள்ளார்.

நமது தாய்மொழியை அதிகம் பயன்படுத்த வேண்டும், மகாத்மா காந்தி, சர்தார் வல்லபாய் படேல் கண்ட கனவுகளை நனவாக்கும் மொழியாக இந்தியை பயன்படுத்த வேண்டும் என்றும், நாட்டு மக்கள் அனைவரையும் இந்தி நாளை முன்னிட்டு கேட்டுக் கொள்வதாக அமித்ஷா கூறியுள்ளார்.

நாட்டு மக்களுக்கு இந்தி தின வாழ்த்துகளையும் மத்திய உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். 

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே