இந்திய பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானிக்கு முதலிடம்

இந்தியாவின் பெரும் பணக்காரர் பட்டியலில் தொடர்ந்து 8 வது ஆண்டாக முகேஷ் அம்பானி முதலிடத்தை பிடித்துள்ளார். 

மும்பையை தலைமையிடமாக கொண்ட இந்தியன் இன்போலைன் என்ற நிதி நிறுவனம் இதுகுறித்து வெளியிட்டுள்ள பட்டியலில், 3 லட்சத்து 80 ஆயிரத்து 700 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை கொண்ட ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி முதலிடத்தை பிடித்துள்ளார்.

  • அந்த பட்டியலில், இந்துஜா குடும்பம் 1லட்சத்து 86 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களுடன் இரண்டாவது இடத்திலும்,
  • விப்ரோ நிறுவனர் அசீம் பிரேம்ஜி 1லட்சத்து 17 ஆயிரத்து 100 கோடி ரூபாய் மதிப்பான சொத்துக்களுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர். 

மேலும் கடந்த ஆண்டு 1000 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து கொண்டோர் எண்ணிக்கை 831 ஆக இருந்த நிலையில், நடப்பு ஆண்டில் இது 953 ஆக உயர்ந்துள்ளது.

அதே நேரத்தில் அமெரிக்க டாலர் மதிப்பிலான கணக்கீட்டில் இந்திய பில்லியனைர் எண்ணிக்கை கடந்த 141 ஆக இருந்த நிலையில் நடப்பு ஆண்டில், இது 131 ஆகி உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

பணக்காரர்கள் அதிகம் வசிக்கும் பட்டியலில்,

  • 246 பேருடன் மும்பை முதலிடத்தையும்,
  • 175 பேருடன் டெல்லி இரண்டாவது இடத்தையும்,
  • 77 பேருடன் பெங்களூரு மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன.

25 வயதான ஓயோ ஓட்டல் நிறுவனர்  ரித்தேஷ் அகர்வால் 7500 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் மூலம் இந்த பட்டியலில் மிக இளம் வயது பணக்காரர் என்ற இடத்தை பிடித்துள்ளார்.

37 வயதான கம்ப்யூட்டர் நிறுவன தொழில் அதிபர் திவயங் துருக்யா 40 வயதிற்கு உட்பட்ட பெரும் பணக்காரர் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

இந்த பட்டியலில் 152 மகளிர் இடம் பெற்றுள்ள நிலையில், ஹெச்.சி.எல். நிறுவன மேலாண்மை இயக்குநர் ரோஷிணி முதல் இடத்தை பிடித்துள்ளார்.

பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்களின் மொத்த சொத்து மதிப்பு கடந்த ஆண்டை விட நடப்பு ஆண்டில் 2 சதவிகிதம் உயர்ந்துள்ள நிலையில், சராசரி சொத்து மதிப்பு 11 சதவிகிதம் குறைந்துள்ளது.

5 டிரில்லியன் டாலர் மதிப்பு கொண்டதாக இந்திய பொருளாதாரத்தை உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளதால், அடுத்த 5 ஆண்டுகளில் பெரும் பணக்கார ர்களின் எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே