நாடு முழுவதும் இ-சிகரெட்களுக்கு தடை விதிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளில் இ-சிகரெட் எனப்படும் எலக்ட்ரானிக் சிகரெட்கள் புழக்கம் அதிகரித்துள்ளது. அந்த மோகம் தற்போது இந்தியாவிலும் பரவி வருகிறது. குறிப்பாக இளைஞர்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர். இதனால் இ-சிகரட்களுக்கு தடை விதிக்குமாறு பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்து வந்தனர்.
இ-சிகரெட்கள், பென்டிரைவ், சிறிய உருளை குழாய், பேனா போன்ற வெவ்வேறு வடிவத்தில் வெளிவருகின்றன. அவற்றின் உள்ளே திரவத்தினால் ஆன நிக்கோடின் நிரப்பப்பட்டிருக்கும். அதிலுள்ள பட்டனை அழுத்துவதன் மூலம் திரவம் ஆவியாக மாறிவிடும். அதை உறிஞ்சுவதால் சாதாரண சிகரெட்களை புகைப்பது போல் புகைக்கலாம் என கூறப்படுகிறது.
இந்த இ-சிகரெட்களால் எந்தவித நாற்றமும் ஏற்படாது எனவும், சாதாரண சிகரெட்டை விட குறைவான உடல் பாதிப்புகள் தான் ஏற்படும் என கவர்ச்சிகரமான விளம்பரங்கள் வெளியிடுகின்றனர். இதனால் இளைஞர்கள் இதன்மீது மோகம் கொள்கின்றனர்.
இ-சிகரெட் புகைப்பதால் மலட்டுத்தன்மை, பக்கவாதம், மாரடைப்பு, புற்றுநோய் உண்டாவதாக சில ஆய்வுகள் கூறுகின்றன. அதிலிருந்து வெளிவரும் ஏரோ செல்களால் அருகில் இருப்பவர்களும் பாதிப்படைகின்றனர். கர்ப்பிணிகளுக்கு உடல்நல பாதிப்புகளும், இளம் பருவத்தினருக்கு மூளை வளர்ச்சி பாதிப்புகளும் ஏற்படுவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், டில்லியில் நடந்த நிருபர்கள் சந்திப்பில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறும்போது, நாடு முழுவதும் இ-சிகரெட்டுக்கு தடை விதிக்க மத்திய அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது. இ-சிகரெட்களை பள்ளி மாணவர்கள் கூட பயன்படுத்துகின்றனர். பள்ளி மாணவர்கள் பயன்படுத்துவது 77 சதவீதம் அதிகரித்துள்ளது.
அமெரிக்காவில் 30 லட்சத்திற்கும் அதிகமானோர் இ-சிகரெட் பயன்படுத்தி வருகின்றனர். அவர்களில் 7 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமைச்சரவை ஒப்புதல் அளித்ததை அடுத்து இந்தியாவில் இ-சிகரெட்கள் ஏற்றுமதி, இறக்குமதி, விற்பனை, விளம்பரம் செய்ய தடை விதிக்கப்படுகிறது.
சில தகவல்களின் படி, இ-சிகரெட்கள் 150க்கும் மேற்பட்ட சுவைகளில் 400க்கும் மேற்பட்ட பிராண்டுகள் உள்ளதாகவும், அவற்றில் எதுவும் இதுவரை இந்தியாவில் தயாரிக்கப்படவில்லை எனவும் நிர்மலா சீதாராமன் கூறினார்.
இ-சிகரெட் எனப்படும் எலக்ட்ரானிக் சிகரெட்கள் மீதான தடையால், பட்ஜெட்டில் 2,028 கோடி ரூபாய் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.