‘இந்தியாவின் தந்தை மோடி’: புகழாரம் சூட்டிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

இந்தியாவின் தந்தையைப் போன்று மோடி திகழ்வதாக புகழாரம் சூட்டினார் ட்ரம்ப். இந்தியாவில் பல்வேறு கருத்து வேறுபாடுகள், மோதல்கள் இருந்த நிலையில் அனைத்தையும் மோடி ஒருங்கிணைத்துள்ளதாகவும் ட்ரம்ப் கூறியுள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பை பிரதமர் நரேந்திர மோடி நேற்றிரவு சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வுகாண பிரதமர் நரேந்திர மோடியும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று டொனால்டு டிரம்ப் வலியுறுத்தினார்.

ஐநா பொது சபைக் கூட்டத்தில் பங்கேற்க அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பை இந்திய நேரப்படி நேற்றிரவு சந்தித்துப் பேசினார்.

ஹூஸ்டன் நிகழ்ச்சியில் டிரம்ப்புடன் இணைந்து கலந்துகொண்ட நிலையில், மூன்று நாட்களில் இரண்டாவது முறையாக இந்த சந்திப்பு நடைபெற்றது.

ஐநா தலைமையகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் இந்திய தரப்பில் மோடியுடன், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல், வெளியுறவு செயலாளர் விஜய் கோகலே உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

சுமார் 45 நிமிடங்கள் நடைபெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தைக்குப் பிறகு டிரம்ப்பும், நரேந்திர மோடியும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய பிரதமர் மோடி, தனக்கு மட்டுமன்றி இந்தியாவுக்கும் சிறந்த நண்பராக டொனால்டு டிரம்ப் திகழ்கிறார்.

பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக இருதரப்பிலும் விரிவான மற்றும் பயனுள்ள பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பெட்ரோநெட் நிறுவனத்தின் முதலீடு மூலம், 43 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகம் நடைபெற வாய்ப்பு உள்ளது.

வர்த்தகத்தைப் பொறுத்தவரை ஹூஸ்டனில் எனது முன்னிலையில், இந்தியாவின் பெட்ரோநெட் நிறுவனம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

இதன்படி எரிசக்தி துறையில் ரூ.17,750 கோடி அளவுக்கு பெட்ரோநெட் நிறுவனம் முதலீடு செய்ய உள்ளது. இதன்மூலம், வரும் ஆண்டுகளில் ரூ.43,000 கோடி அளவுக்கு வர்த்தகம் நடைபெற வாய்ப்பு உள்ளது. 50,000 வேலைவாய்ப்புகள் உருவாகும். இது இந்தியாவின் மிகப்பெரும் முயற்சியாக நான் கருதுகிறேன் என்றார்.

இதனைத் தொடர்ந்து பேசிய டொனால்டு டிரம்ப், இந்தியாவின் தந்தையைப் போன்று மோடி திகழ்வதாக புகழாரம் சூட்டினார். இந்தியாவில் பல்வேறு கருத்து வேறுபாடுகள், மோதல்கள் இருந்த நிலையில் அனைத்தையும் மோடி ஒருங்கிணைத்துள்ளதாகவும், அமெரிக்க பாப்ஸ்டார் எல்விஸ் பிரெஸ்லி-யைப் போன்றவர் மோடி என்றும் டொனால்டு டிரம்ப் கூறினார்.

மேலும் காஷ்மீர் விவகாரத்தில் மோடியும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் சந்தித்துப் பேசுவதன் மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியும் என்றும் இருவரும் சந்தித்துப் பேசுவார்கள் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் அந்த சந்திப்பின் மூலம் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு பல நல்ல செயல்கள் நடைபெறும் என்றும் ட்ரம்ப் கூறியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே