மூணாறுக்கு உட்படாத பகுதிகளிலும் மூணாறு என பெரிய எழுத்துக்களால் பொறிக்கப்பட்டிருக்கும் பெயர்ப் பலகைகளை பார்த்து ஏமாறும் சுற்றுலாப்பயணிகள். ஆன்லைனில் முன்பதிவு செய்து, சுமார் ஐம்பது கிலோ மீட்டருக்கு அப்பால் தங்கி, அவதிக்குள்ளாவது குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு…
தென்னகத்தின் காஷ்மீர் என்று அழைக்கப்படுகிறது மூணாறு. அழகிய மலைகளுக்கிடையே தேயிலை தோட்டங்களின் நடுவில் வெள்ளியை உருக்கி ஊற்றினால் போல் கொட்டும் நீர்வீழ்ச்சிகள், துள்ளி ஓடும் புள்ளி மான்கள், வரையாடுகள், காட்டெருமைகள், காட்டு யானைகள் என வனமும், வனப்பும் சூழ்ந்த பகுதியை கண்டுகளிக்க உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப்பயணிகளும் அதிகளவில் வந்து செல்கின்றனர்.
சுற்றுலாத்தலங்களுக்கு வந்தபின் தங்கும் விடுதிகளை தேடிய காலம் போய், தற்போது ஆன்லைனில் விடுதிகளை புக் செய்துவிட்டு வரும் சுற்றுலாப்பயணிகள்தான் அதிகம். மூணாறு அருகே குறைந்த விலையில், சொகுசான தங்கும் விடுதிகள் என பதிவிட்டுள்ளதைப்பார்த்து, அதன் உண்மை தன்மை குறித்து அறியாமல் சுற்றுலாப்பயணிகள் அறைகளைப் பதிவு செய்து விடுகின்றனர்.
ஆனால், சுற்றுலாத்தலத்திற்கு வந்தபின்புதான் தெரிகிறது மூணாறுக்கும், தாங்கள் பதிவு செய்துள்ள விடுதிக்கும் சுமார் 50 முதல் 60 கிலோ மீட்டர் தூரம் இருப்பது. அழகிய கோடைவாசஸ்தலத்தை கண்டுகளிக்க நீண்ட தொலைவில் இருந்து வரும் சுற்றுலாப்பயணிகளுக்கு, இது பெரும் ஏமாற்றததை தருவதுடன் மனஉளைச்சலையும் ஏற்படுத்தி வருகிறது.
அழகழகான மூணாறின் புகைப்படங்களை தனியார் சொகுசு விடுதிகள் ஆன்லைனில் பதிவிட்டுள்ளதை பார்த்து ஏமாறும் சுற்றுலாப்பயணிகள், அந்த விடுதிகளிலேயே தங்க முன்பதிவு செய்து விடுகின்றனர்.
இதில், வருத்தம் என்னவென்றால் தங்கியிருக்கும் இடமே மூணாறு என நம்பி, ஒரிஜினல் மூணாறை பார்க்காமலேயே பெரும்பாலான சுற்றுலாப்பயணிகள் திரும்பிச் சென்ற கதையும் உண்டு.
சில தனியார் சொகுசு விடுதிகள் செய்யும் இதுபோன்ற ஆன்லைன் மோசடிகளால் சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றப்படுவதுடன், மூணாறில் சுற்றுலாப்பயணிகளை நம்பியே வாழ்க்கை நடத்தி வரும் கால்டாக்சி ஓட்டுநர்கள், சிறு, குறு தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக வருத்தம் தெரிவிக்கின்றனர்.
மூணாறுக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் தங்கும் விடுதிகளுக்கு முன்பதிவு செய்யும் முன்பு, அதன் உண்மை தன்மை குறித்து ஆராய வேண்டும் என்றும் ஆராய தவறினால் பல கிலோ மீட்டர் கடந்து வரும் சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றப்படுவதுடன், பரிதவிப்பு மற்றும் பண விரயமுமே மிச்சம் என அப்பகுதியினர் எச்சரித்துள்ளனர்.
மூணாறு பகுதிக்கு உட்படாத குறிப்பிட்ட பகுதியின் பெயர்களை சிறிய எழுத்திலும், மூணாறை பெரிய எழுத்திலும் பொறித்துள்ள தனியார் விடுதிகள் மற்றும் கடைகள் மீது உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது.