ஐதராபாத்தில் அமைந்துள்ள அமேசான் நிறுவனத்தின் மிகப்பெரிய அலுவலக கட்டிடத்தின் கட்டுமானத்தில், ஈபிள் டவர் அமைக்க பயன்படுத்தப்பட்ட மொத்த இரும்பின் எடையைவிட இரண்டரை மடங்கு அதிகமான இரும்பு பயன்படுத்தப்பட்டுள்ளதாக அமேசான் நிர்வாக தரப்பு தெரிவித்துள்ளது.
மிகப்பெரிய ஆன்லைன் வர்த்தக நிறுவனமாக வளர்ந்து நிற்கும் அமேசான் நிறுவனம், இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் தனது கிளைகளை பரப்பி இயங்கிவருகிறது.
அந்த வகையில் ஐதராபாத்தில் பிரமாண்டமான அலுவலக கட்டிடத்தை அந்நிறுவனம் நிறுவியுள்ளது. இதுவரை நிறுவப்பட்ட அமேசானின் அலுவலக கட்டிடங்களிலேயே மிகப்பெரிய கட்டிடம் எனும் சிறப்பை பெற்றுள்ள இக்கட்டிடம் சுமார் 65 கால்பந்து மைதானங்களின் பரப்பளவுக்கு இணையாக அமைக்கப்பட்டுள்ளது.
ஹெலிபேட் வசதி உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளதுடன், ஒரு விநாடிக்கு ஒரு தளத்தை கடக்கும் வகையிலான அதிநவீன 49 மின் தூக்கிகளும் இக்கட்டிடத்தில் அமைந்துள்ளன.
இந்த மின் தூக்கிகள் ஒரே நேரத்தில் 972 பேர் பயன்படுத்திக்கொள்ளும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளன.
282 அடி உயரத்தில் பிரமாண்டமாக அமைந்துள்ள கட்டிடத்தில் சுமார் 15 ஆயிரத்திற்கும் அதிகமான ஊழியர்கள் பணியாற்றுவதற்கு ஏதுவான வகையிலான அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இக்கட்டிடத்தின் சிறப்பு குறித்து தெரிவித்துள்ள, அமேசான் நிறுவன துணை தலைவர் ஜான் ஸ்கோட்லர், “கட்டிடத்தின் கட்டுமானத்தில், ஈபிள் டவர் அமைக்க பயன்படுத்தப்பட்ட மொத்த இரும்பின் எடையைவிட சுமார் இரண்டரை மடங்கு அதிகமான இரும்பு பயன்படுத்தப்பட்டுள்ளது” எனும் ஆச்சரிய தகவலையும் தெரிவித்துள்ளார்.