ஆசிரியர் தினத்தையொட்டி தமிழக ஆளுநர், முதலமைச்சர் வாழ்த்து

ஆசிரியர் தினத்தையொட்டி தமிழக ஆளுநர், முதலமைச்சர் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

நாளை நாடு முழுவதும் ஆசிரியர் தினம் கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் விடுத்துள்ள வாழ்த்தில், வகுப்பில் ஆசிரியர்கள் அளிக்கும் பயிற்சி தான் குழந்தைகளின் எதிர்காலத்தை நிர்ணயிக்கின்றது என்றும், ஆசிரியர்களின் ஒவ்வொரு செயலும் குழந்தைகளின் தனித் தன்மையில் பிரதிபலிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் ஆசிரியர் தினத்தில் அனைத்து ஆசிரியர்களின் பணியையும் அங்கீகரித்து அவர்கள் தங்கள் பணியை சிறப்பாக செய்வதற்கு தேவையான வசதிகளை செய்து தர வேண்டியது அவசியம் என்றும் அவர் தனது வாழ்த்தில் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் வெளியிட்டுள்ள வாழ்த்தில், அரசு செயல்படுத்துகின்ற எண்ணற்ற திட்டங்களை செம்மையான முறையில் பயன்படுத்தி, சிறந்த மாணவர்களை உருவாக்கி வரும் ஆசிரிய பெருமக்களின் சேவை மெச்சத்தக்க ஒன்றாகும் என தெரிவித்துள்ளார்.

மேலும் மாணவ சமுதாயத்தின் சிறப்பான வாழ்விற்கு அல்லும் பகலும் உழைத்திடும் ஆசிரியப் பெருமக்களுக்கு எனது ஆசிரியர் தின வாழ்த்துக்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே