அமேஸான் காட்டுக்குள் அத்துமீறிச் சென்றவர்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு

உலகின் மிகப் பெரிய மலைக் காடுகளும் பூமியின் நுரையீரல் என்று வர்ணிக்கப்படுபவையான அமேசான் காடுகள், கடந்த சில வாரங்களாக தீப்பிடித்து எரிந்து வருகிறது.

இதில் போலோவிய எல்லைக்கு உட்பட்ட 25 லட்சம் ஏக்கர் பரப்பளவிலான காடுகள் அழிந்து போயின. பிரேசிலில் 9,500 இடங்களில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏராளமான மரங்கள், உயிரினங்கள் கருகி சாம்பலாகின. பிரேசில் அரசு தெரிவித்துள்ள தகவலின்படி இந்தாண்டு மட்டும் 12,000 சதுர கிலோ மீட்டருக்கு மரங்கள் அழிக்கப்பட்டுள்ளன.

விவசாயம், சுரங்கம் மற்றும் மரம் வெட்டி கடத்துதல் போன்ற நிகழ்வுகளால் இந்த பேரழிவு நடந்து உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் தொடர்ந்து ஏற்படும் தீயை தடுக்க வேண்டும் என உலக நாடுகள் பிரேசிலுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன. மேலும் அமேஸான் தீயை அணைப்பதில் பிரேசில் மந்தமாக செயல்படுவதாக சுற்றுசூழலியல் ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இதனிடையே அமேஸான் காடுகளுக்குள் சிலர் அத்துமீறி சென்றதாக கூறப்படுகிறது. இவர்களே தீ வைப்பு
சம்பவங்களில் ஈடுபட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் அங்கு சென்ற போலீசார் துப்பாக்கியால் சுட்டனர். இதில் யாரும் காயம் அடையவில்லை என்ற போதும் வனப்பகுதிக்குள் சென்று அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

இந்த நிலையில் பிரேசிலில் பற்றி எரியும் வனத்தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் கடினமாக உள்ளன. குறிப்பாக மாடா கிராசோ பகுதியில் தீயணைப்பு வீரர்களுக்கு பெரும் சவாலை ஏற்படுத்தி உள்ளது. அந்த மாநிலத்தின் அதிகப்படியான வெப்ப நிலைமையும், வேகமாக வீசும் காற்றும் நிலைமையை மேலும் மோசமாக்கியது.

காற்றில் ஈரப்பதம் மிகவும் குறைவாக இருப்பதால், தீயை அணைத்த பின்னரும் அதே பகுதியில் மீண்டும் மீண்டும் தீ பிடித்து வருவது தீயணைப்பு வீரர்களை சோர்வடையச் செய்து வருகிறது. ஆனாலும் உள்ளூர் மீட்பு படையினருடன், ராணுவத்தினரும் கைகோர்த்து உள்ளதாலும், வெளிநாட்டு விமானங்களின் வருகையாலும், தீயணைப்பு நடவடிக்கைகள் வேகமாக நடந்து வருவதாக உள்ளூர் தீயணைப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே