அமெரிக்கப் பொருட்கள் மீது 75 பில்லியன் டாலர் அளவிற்கு வரி விதித்தது சீனா

கூடுதல் வரி விதித்ததை தொடர்ந்து சீனாவில் செயல்படும் அமெரிக்க நிறுவனங்கள் உடனடியாக வெளியேறுமாறு டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

அமெரிக்கா சீனா இடையே கடந்த சில ஆண்டுகளாக வர்த்தகப்போர் நடந்து வருகிறது. தற்போது உச்சகட்டத்தை அடைந்துள்ள வர்த்தகப்போரினால் இரு நாடுகளும் மாறி மாறி இறக்குமதி வரியை அதிகரித்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக சீனாவிலிருந்து இறக்குமதியாகும் செல்போன்கள் பொம்மைகள் மடிக்கணினி உள்ளிட்ட பொருட்களுக்கு 10 விழுக்காடு கூடுதல் வரி விதிக்க அமெரிக்கா அதிபர் டிரம்ப் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து அமெரிக்காவில் இருந்து உருவாகும் சோயாபீன்ஸ் மாட்டிறைச்சி விவசாய கருவிகள் மற்றும் சிறிய ரக விமானங்களுக்கு 5 முதல் 10 விழுக்காடு அல்லது 75 பில்லியன் டாலர் அளவிற்கு வரியை உயர்த்தி சீனா பதிலடி கொடுத்தது. இதன் காரணமாக அமெரிக்காவின் பங்கு சந்தைகள் கடும் சரிவை சந்தித்தன. இதனை அடுத்து சீனாவில் இருந்து செயல்படும் அமெரிக்க நிறுவனங்கள் உடனே வெளியேருமாறு டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் உண்மையாகவே தங்களுக்கு சீனா தேவையில்லை என்று குறிப்பிட்டுள்ளார். இதன் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவின் பணம் விரயம் ஆவது அதிகரித்துக்கொண்டே போவதாகவும் அதில் அவர் தெரிவித்துள்ளார். மேலும் அமெரிக்க நிறுவனங்கள் சீனாவுக்கு மாற்றாக மற்றொரு இடத்தை தேட ஆரம்பிக்க தொடங்கியுள்ளதாகவும் தனது ட்விட்டரில் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே