அமராவதி தண்ணீரை நம்பி விவசாய பணிகளில் விவசாயிகள் மும்முரம்

கரூர் மாவட்டத்தில் அமராவதி ஆற்று தண்ணீரை நம்பி விவசாயிகள் விவசாய பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

அமராவதி ஆற்றுப் பாசனத்தின் கடைமடை பகுதியான கரூர் மாவட்டத்தில் சுமார் 25 ஆயிரம் ஏக்கர் பாசன பரப்பு உள்ளது. சமீபத்தில் பெய்த மழையால் அமராவதி அணை நீர்மட்டம் எழுபது அடிக்கு மேல் உயர்ந்ததால் திருப்பூர் மாவட்ட பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. அப்போது கரூர் மாவட்டத்திற்கு குடிநீர் தேவைக்காக ஐந்து நாட்கள் மட்டுமே தண்ணீர் திறக்கப்பட்டு பின்னர் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் கரூர் மாவட்ட பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும் என்ற நம்பிக்கையில் அணைப்பாளையம், காங்கேயம்பாளையம், செல்லாண்டிபாளையம், தாந்தம்பாளையம், விஸ்வாசனாதபஜார் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களை தயார்படுத்தும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். விவசாயிகளின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப மாவட்ட நிர்வாகம் அமராவதி அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் பெற்று தர வேண்டும் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே