அந்நிய மண்ணில் அசத்தும் கேப்டன் கோலி..! செய்தி அலசல்

வெளிநாட்டு மண்ணில் அதிக டெஸ்ட் போட்டிகளில் வெற்றிக்கு வழி நடத்திய இந்திய கேப்டன் என்ற சாதனையை விராட் கோலி படைத்திருக்கிறார். அதுபற்றி விவரங்களை இனி பார்க்கலாம்.

உலக கோப்பை அரை இறுதியில் அதிர்ச்சி தோல்வி. பேட்ஸ்மேன்களின் சொதப்பலான பேட்டிங்கால் இந்தியணிகளோடு சேர்ந்து கேப்டன் விராட் கோலியும் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். விராட் கோலி தலைமையில் இந்திய அணி உலக கோப்பை போன்ற முக்கிய தொடர்களில் ஜொலிக்க தவறுவதாக கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர்.

இந்த எதிர்மறை கருத்துக்களை காதில் போட்டுக்கொள்ளாத விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியை அசாத்தியமான முறையில் தொடர்ந்து வழிநடத்தி வருகிறார். அவரின் ஆக்ரோஷமாக கேப்டன்ஷிப் ரன் வேட்டையின் காரணமாக வெளிநாட்டு மண்ணில் இந்திய அணி தொடர்ந்து பல வெற்றிகளை குவித்து வருகிறது. மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 318 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் அந்நிய மண்ணில் அதிக டெஸ்ட் போட்டிகளை வென்ற இந்திய கேப்டன் என்ற கங்குலியின் சாதனையை கோலி முறியடித்தார்.

கங்குலி தலைமையிலான இந்திய அணி அந்நிய மண்ணில் நடைபெற்ற 28 டெஸ்ட் போட்டிகளில் 11 இல் வெற்றி பெற்றிருந்தது. தற்போது கோலி தலைமையிலான இந்திய அணி 28 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று அதில் 12 போட்டிகளில் வெற்றி பெற்றதன் மூலம் கோலி இந்த சாதனையை படைத்திருக்கிறார். வெளிநாட்டு மண்ணில் இந்திய அணியை சிறந்த முறையில் வழிநடத்தியவர் என கங்குலி சிலாங்கிக்கப்பட்டு வரும் நிலையில் இந்த காலகட்டத்தில் விராட் கோலி தலைமையில் இந்திய அணி அசுரத்தனமாக விளையாடுவதாக கோலியை கங்குலியே புகழாரம் சூட்டியிருக்கிறார்.

அண்மையில் ஆஸ்திரேலிய தொடரில் வென்றது இங்கிலாந்து மண்ணில் தொடரை வெல்லாவிட்டாலும் வெற்றிக்காக கடுமையாக போராடியதை பார்த்து இந்திய ஜாம்பவான்கள் கோலியை புகழ்ந்து தள்ளினர். இதுமட்டுமன்றி ஒட்டுமொத்தமாக அதிக டெஸ்ட் வெற்றிகளை பெற்று இந்திய கேப்டன் என்ற தோனியின் சாதனையையும் கோலி சமன் செய்திருக்கிறார்.

கோலிக்கு 30 வயதேயாகும் நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியின் சிறந்த கேப்டனாக உருவெடுக்க வாய்ப்புள்ளதாக கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். வரும் காலங்களில் தனது பேட்டிங்கில் சாதனை படைத்து வருவது போன்று கேப்டன்ஷிப்பிலும் கோலி சாதனை படைப்பார் என நம்பலாம்

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே