என்னதான் நடக்கிறது ராஜஸ்தான் அரசியலில்…..

கொரோனா தொடர்பான நெருக்கடி நிலவும் சூழ்நிலையிலும் சில மாநிலங்களில் பா.ஜ.க மற்றும் ஆளும் கட்சிகளுக்கு இடையே மாநிலத்தில் நடைபெறும் ஆட்சி தொடர்பாக மோதல்கள் நடந்தவண்ணம் உள்ளன.

அவ்வகையில், ராஜஸ்தான் மாநிலத்தில் இந்தப் பிரச்னை தீவிரமாகியுள்ளது.

ஆனால், பா.ஜ.கவுடனான பிரச்னை மட்டும் அல்லாது அம்மாநிலத்தின் ஆளும் கட்சியான காங்கிரஸின் உள்கட்சிப் பிரச்னையும் தீவிர கட்டத்தை எட்டியுள்ளது.

இதனால், ஆட்சிக்கு ஆபத்து ஏற்படும் சூழல் நிலவுவதாகவும் தொடர்ந்து கருத்துகள் வைக்கப்பட்டு வருகின்றன.

இதனால், ராஜஸ்தான் அரசியல் களத்தில் மிகுந்த பதற்றம் நிலவி வருகிறது.

ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த 2018-ம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் 200 இடங்களில் 107 இடங்களைப் பிடித்து ஆட்சி அமைத்தது.

சில சுயேட்சை உறுப்பினர்களும் பிற கட்சி உறுப்பினர்களும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளித்து வந்தனர்.

காங்கிரஸ் ஆட்சியைப் பிடிப்பது உறுதியானாலும், முதல்வர் பதவிக்கு அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட் இடையே கடுமையான போட்டி நிலவியது.

இதனையடுத்து முதல்வர் பதவி அசோக் கெலாட்டுக்கும் துணை முதல்வர் பதவி சச்சின் பைலட்டுக்கும் வழங்கப்பட்டது.

எனினும், இருவரிடையேயும் அதிகாரம் தொடர்பான அதிருப்தி நிலவி வந்தது.

அசோக் கெலாட், சச்சின் பைலட்டை ஓரம் கட்ட முயற்சிப்பதாக விமர்சனங்கள் தொடர்ந்து எழுந்தன.

முதல்வர் மற்றும் துணை முதல்வர்களுக்கு இடையேயான அதிருப்தியைப் பயன்படுத்தி பா.ஜ.க, காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்க்க திட்டமிட்டு வந்ததாக காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டுகளை எழுப்பியது.

மத்தியப் பிரதேசத்தில் ஜோதிராதித்யா சிந்தியாவை வைத்து காங்கிரஸ் ஆட்சி கவிழ்க்கப்பட்டதைப் போல ராஜஸ்தானிலும் ஆட்சியைக் கவிழ்க்க பா.ஜ.க திட்டமிடுவதாக காங்கிரஸ் கட்சியினர் கொதித்தனர்.

இதனையடுத்து, ஆளும் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களிடம் ஆட்சியைக் கவிழ்ப்பது தொடர்பாக கோடிக்கணக்கில் பேரம் பேசியதாகக் கூறி பா.ஜ.க-வைச் சேர்ந்த இருவரை அம்மாநில காவல்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதேபோல, சுயேச்சை எம்.எல்.ஏக்கள் சிலர் மீதும் குற்றச்சாட்டுகள் எழுந்ததை அடுத்து விசாரணை நடைபெற்று வருகின்றன.

இந்த பிரச்னைகள் தொடர்பாக காங்கிரஸ் உறுப்பினர்களில் சிலர் இணைந்து கூட்டு அறிக்கை ஒன்றையும் வெளியிட்டனர்.

பா.ஜ.க உடனான பிரச்னைகள் ஒருபுறம் சென்றுகொண்டிருக்க, மறுபுறம் காங்கிரஸின் உள்கட்சியில் நிலவும் பிரச்னைகளைத் தீர்க்க அக்கட்சியின் மூத்த தலைவர்கள் தலையிட்டு இருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி முடிவைக் கொண்டுவர முயற்சித்தனர்.

எனினும், அவர்களுக்கிடையேயான மோதல் தொடர்ந்துகொண்டுதான் இருந்தது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் மாநிலத்தின் சில இடங்களில் நிலவும் சட்டம் ஒழுங்கு பிரச்னை தொடர்பாக தனது விமர்சனத்தை பைலட் முன் வைத்தார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த மாநிலங்களவைத் தேர்தலின் போதும் இருவருக்கும் இடையே பிரச்னைகள் தீவிரமானது.

கோட்டா மருத்துவமனையில் குழந்தைகள் இறந்த சம்பவமும் இருவருக்கும் இடையில் இருந்த விரிசலை இன்னும் அதிகமாக்கியது.

தொடர்ந்து இருவருக்கும் இடையில் முரண்பாடுகள் அதிகமாகிக் கொண்டே இருந்தன.

காங்கிரஸ் அரசாங்கத்தின் ஆட்சி தொடர்வது தொடர்பான நெருக்கடியும் தொடர்ந்து அதிகமாகி வந்தன.

இந்த நிலையில், துணை முதல்வர் சச்சின் பைலட் தனது ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களுடன் தற்போது டெல்லிக்கு சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விரைவில் சோனியா காந்தி பைலட்டுடன் பேச்சு வார்த்தை நடத்த இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், முதல்வர் அசோக் கெலாட்டும் தனது அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களை பேச்சுவார்த்தை நடத்த அழைத்துள்ளார்.

தலைமை கொறடா மகேஷ் ஜோஷி மற்றும் துணை கொறடா மகேந்திர சவுத்ரி ஆகியோரும் இதில் கலந்துகொள்வதாகக் கூறப்படுகிறது.

பா.ஜ.க-வை கடுமையாக விமர்சித்தும் அசோக் கெலாட் பேசியுள்ளார்.

எனினும் கெலாட்டின் குற்றச்சாட்டுகளை பா.ஜ.க மறுத்துள்ளது.

காங்கிரஸில் நிலவும் இந்த உள்கட்சிப் பிரச்னை தொடர்பாக அக்கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் தங்களது அதிருப்தியை தொடர்ந்து பதிவு செய்து வருகின்றனர்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே