ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்குர் ஆகியோர் அரை சதம் விளாசினர்.

ஆஸ்திரேலியாவை விட இன்னும் 75 ரன்களே பின் தங்கிய நிலையில் இந்திய அணி தொடர்ந்து விளையாடி வருகிறது.

அறிமுக போட்டியிலேயே 3 விக்கெட்டுகளை வீழ்த்திய தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் அரை சதமும் அடித்து நம்பிக்கை ஏற்படுத்தியுள்ளார்.

இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

இதில் 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் உள்ள காபா மைதானத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி, முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 87 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 274 ரன்கள் எடுத்தது.

ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 115.2 ஓவர்களில் 369 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதன்பிறகு விளையாடிய இந்திய அணி 2-ம் நாள் தேநீர் இடைவேளையின்போது 26 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 62 ரன்கள் எடுத்தது.

இதனைத் தொடர்ந்து இன்று 3-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

புஜாரா, ரிஷப் பந்த் ஆகியோர் சொற்ப ரன்களில் வெளியேறினாலும், அதன் பிறகு களமிறங்கிய வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்குர் நிதானமாக ஆடி நம்பிக்கையளித்தனர்.

ஷர்துல் தாக்குர் 115 பந்துகளில் 9 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் உள்பட 67 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். வாஷிடங்டன் சுந்தர் அரை சதத்தைக் கடந்து தொடர்ந்து விளையாடி வருகிறார்.

ஆஸ்திரேலியாவை விட இன்னும் 75 ரன்களே பின் தங்கிய நிலையில் இந்திய அணி விளையாடி வருகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே