500 ட்விட்டர் கணக்குகளை முடக்கியது ட்விட்டர் நிறுவனம்..!!

விதிமுறைகளை மீறியதாக இந்தியாவில் 500 ட்விட்டர் கணக்குகளை ட்விட்டர் நிறுவனம் முடக்கியது.

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான டெல்லியில் 77வது நாளாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

டெல்லியில் நடக்கும் விவசாயிகள் போராட்டம் தொடர்பாக தவறான தகவல்களை பரப்பும் டிவிட்டர் கணக்குகளை முடக்குமாறு மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. குடியரசுத் தினத்தன்று விவசாயிகளின் டிராக்டர் பேரணி வன்முறையாக மடைமாற்றப்பட்டது.

இதில் வன்முறையைத் தூண்டியவர்களின் கணக்குகளை நிரந்தரமாக முடக்க மத்திய அரசு ட்விட்டருக்கு உத்தரவிட்டிருந்தது.

ஆனால், ட்விட்டரோ 257 பயனர்களின் கணக்கைத் தற்காலிகமாக முடக்கி, சில தினங்களுக்குப் பின் பயன்படுத்த அனுமதியளித்தது.

இதனால் மத்திய அரசு அதிருப்தியானது.

உடனே ஐடி அமைச்சகத்தின் சார்பில் ட்விட்டருக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியது. அந்நோட்டீஸில்,’விவசாயிகள் போராட்டம் தொடர்பாக தவறான தகவல்களை பரப்பும் 1,178 கணக்குகளை முடக்க வேண்டுமென கடந்த 4ம் தேதி உத்தரவிட்டது.

மேலும், உத்தரவுக்கு கட்டுப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்; அபராதம் மற்றும் 7 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் மத்திய அரசு எச்சரித்தது.   

மத்திய அரசு பரிந்துரை இந்த நிலையில், விவசாயிகள் போராட்டம் குறித்து அவதூறான தகவல் பரப்பியதாக 500 ட்விட்டர் கணக்குகளை ட்விட்டர் நிறுவனம் முடங்கியுள்ளது.

இது குறித்து ட்விட்டர் நிறுவனம் கூறியுள்ளதாவது, ‘500 ட்விட்டர் கணக்குகள் இந்தியாவில் மட்டும் தான் முடக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டில் 500 ட்விட்டர் கணக்குகள் செயல்பாட்டில் இருக்கும்.

மேலும் செய்தி ஊடக நிறுவனங்கள், ஊடகவியலாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல்வாதிகள் ஆகியோரின் ட்விட்டர் கணக்குகள் முடக்கப்படவில்லை.

அவ்வாறு ட்விட்டர் கணக்குகளை முடக்குவது இந்திய சட்டத்தின் கீழ் அவர்களின் கருத்துச் சுதந்திரத்திற்கான அடிப்படை உரிமையை மீறுவதாகும்.

மேலும் நாங்கள் எடுத்துள்ள நடவடிக்கை தொடர்பான முழு விவரங்களையும் மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திற்கு தெரிவித்துள்ளோம்,’என்று தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே