டிக்டாக் செயலி அமெரிக்காவில் தொடர்ந்து செயல்பட அனுமதி..!!

ஆரக்கிள், வால்மார்ட் நிறுவனங்களுடன் டிக்டாக் நிறுவனம் மேற்கொண்டுள்ள ஒப்பந்தத்துக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஒப்புதல் அளித்துள்ளார்.

அமெரிக்கர்களின் தரவுகள் திருடப்படுவதால், தேசப்பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி, பிரபல டிக்டாக் செயலிக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தடைவிதித்தார்.

டிக்டாக் செயலியின் தலைமை நிறுவனமான பைட்டான்ஸ், அதன் அமெரிக்க செயல்பாடுகளை, அமெரிக்க நிறுவனத்திடம் விற்பனை செய்வதற்கும் கெடுவிதித்தார்.

இதையடுத்து மைக்ரோசாப்ட், ஆரக்கிள் உள்ளிட்ட நிறுவனங்களிடம் பைட்டான்ஸ் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.

இந்நிலையில் ஆரக்கிள், வால்மார்ட் நிறுவனங்களுடன் பைட்டான்ஸ் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

அதன்படி டிக்டாக் குளோபல் என்ற பெயரில் உருவாக்கப்படும் புதிய நிறுவனத்தில், அமெரிக்கர்கள் அதிக அளவில் இயக்குநர்களாக இடம்பெற்றிருப்பர்.

மேலும், டிக்டாக் தரவுகளை ஆரக்கிள் நிறுவனம் அமெரிக்காவிலேயே சேகரிக்கும்.

புதிதாக 25 ஆயிரம் வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்படும்.

மேலும், அமெரிக்க இளைஞர்களின் கல்வி வளர்ச்சிக்காக டிக்டாக் நிறுவனம் 5 பில்லியன் அமெரிக்க டாலர் அதாவது இந்திய மதிப்பில் 36 ஆயிரத்து 805 கோடி ரூபாய் வழங்கும்.

இந்த ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

10 கோடி அமெரிக்கர்கள் உள்பட உலகம் முழுவதும் சுமார் 70 கோடி பேர் டிக்டாக் செயலியை பயன்படுத்துகின்றனர்.

நேற்று தேசப்பாதுகாப்பை கருத்தில் கொண்டு டிக்டாக் மற்றும் வி சாட் செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க வர்த்தக அமைச்சகம் கூறியிருந்தது.

இன்று முதல் இந்த இரு செயலிகளையும் அமெரிக்காவில் பதிவிறக்கம் செய்ய முடியாது என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆரக்கிள் டிக்டாக் ஒப்பந்தத்துக்கு டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ளதால், டிக்டாக் மீதான தடை விலக்கப்படும் எனத் தெரிகிறது.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே