கொரோனாவை கட்டுப்படுத்த இது ஒன்றே தீர்வு: மருத்துவர்களின் விளக்கம்

தமிழகத்தில் தேர்தல் பரபரப்பு ஒருபுறம் தொடங்கியுள்ள நிலையில், கொரோனா பாதிப்பு அமைதியாக மறுபுறம் அதிகரித்துக் கொண்டே உள்ளது…

தமிழகத்தில் புதியதாக 867 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கடந்த இரண்டு வாரங்கள் முன்பு வரை புதிய தொற்றாளர்களின் எண்ணிக்கை 500ஐ தாண்டாத நிலையில், தற்போது பாதிப்பு இருமடங்காக அதிகரித்துள்ளது. சென்னையில் நாள் ஒன்றுக்கு 150 முதல் 170 என்ற அளவில் இருந்த புதிய தொற்றாளர்களின் எண்ணிக்கை தற்போது 350ஐ எட்டியுள்ளது. இதேநிலை தொடர்ந்தால் அடுத்த இரண்டு மாதங்களில், பாதிப்பு எண்ணிக்கை கடந்தாண்டு செப்டம்பர் மாதத்தை போல உச்சத்தை அடையும் எனவும் அஞ்சப்படுகிறது. தேர்தல் முடிந்து புதிய அரசாங்கம் அமைய இன்னும் இரண்டு மாதங்கள் உள்ள நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் எவ்வாறு செயல்படுத்தப்படும் என கேள்வி எழுந்துள்ளது.

கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை முடுக்கி விடுவதன் மூலம் மட்டுமே, பரவலை கட்டுப்படுத்த முடியும் எனக் கூறும் மருத்துவர்கள், தமிழகத்தில் முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில், சுமார் ஒரு லட்சம் பேர் தங்கள் இரண்டாவது டோஸ் எடுத்துக் கொள்ள முன்வரவில்லை என்கின்றனர். 2 டோஸ்கள் போட்டுக்கொண்டால் மட்டுமே நோயில் இருந்து முழு பாதுகாப்பு கிடைக்கும் எனவும் தெரிவிக்கின்றனர்

கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் தீவிரமெடுத்துள்ள நிலையில், தமிழகத்துக்கு அப்படியொரு நிலை வராமலிருக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு தேவை என சுகாதாரத்துறை அறிவுறுத்தி வருகிறது. தடுப்பூசி, முகக்கவசம் மற்றும் தனி மனித இடைவெளி ஆகிய மூன்று கவசங்களை கொண்டு, 2வது அலையை வீழ்த்துமா தமிழகம் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்..

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே