பாஜக யாரை பார்த்தும் பயப்படவில்லை – வானதி ஸ்ரீனிவாசன்

தமிழகத்தில் பாஜகவுக்கு இனி பின்னடைவு கிடையாது. முன்னேற்றம் மட்டும்தான் இருக்கும் என, பாஜக தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

தமிழக பாஜக துணைத் தலைவராகப் பதவி வகித்து வந்த வானதி சீனிவாசன், அண்மையில் பாஜக தேசிய மகளிரணித் தலைவராக நியமிக்கப்பட்டார்.

டெல்லியில் பொறுப்பேற்ற பின்னர், விமானம் மூலம் இன்று (நவ. 20) கோவைக்கு வந்தார். அங்கு, கோவை மாவட்ட பாஜக தொண்டர்கள் மேள தாளங்கள் முழுங்க, வானதி சீனிவாசனுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அதைத் தொடர்ந்து வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

“பாஜக தேசிய மகளிரணித் தலைவர் என்ற முக்கிய கவுரவத்தைத் தமிழகத்துக்கு வழங்கியுள்ளனர். தென்னிந்தியாவில் இருந்து முதல் முறையாகத் தமிழகத்துக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் திட்டங்களைப் பெண்கள் வழியாகக் கொண்டு செல்வது, எங்களது பிரதான பணியாக இருக்கும்.

அனைத்து நிலைகளிலும் பெண்களுக்கு உதவும், முக்கியத்துவம் கொடுக்கும் அரசாக இந்த அரசு இருக்கின்றது. நாடு முழுவதும் பெண்களுக்குப் பாதுகாவலராக பிரதமர் நரேந்திர மோடி இருக்கிறார் என்பதை மக்களிடம் கொண்டு செல்வோம்.

தமிழகத்தில் அரசியல் மாற்றம் ஏற்பட வேண்டும் என்பதற்காக வெற்றிவேல் யாத்திரையை மாநிலத் தலைவர் எல்.முருகன் நடத்திக் கொண்டு இருக்கின்றார்.

கட்சியைப் பலப்படுத்த மட்டுமல்ல, தமிழகத்தின் சிறப்பை நாடு முழுவதும் எடுத்துச் செல்லவும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வேன்.

தமிழகத்தில் பாஜக ஆட்சியை ஏற்படுத்துவதையே மாற்றமாகப் பார்க்கின்றோம். தேசிய ஜனநாயகக் கூட்டணியில்தான் நாங்கள் இருக்கின்றோம். கூட்டணியில் எந்த மாற்றமும் இல்லை. இந்தக் கூட்டணியின் தலைமையாக அதிமுக இருக்கின்றது.

ஆட்சி அமைக்க வேண்டும் என்பதுதான் ஒவ்வொரு கட்சியின் எதிர்பார்ப்பாக இருக்கும். பாஜக யாரைப் பார்த்தும் பயப்படவில்லை.

சட்டப்படி நடக்கும் யாத்திரையைத் தடுத்தால், மக்களிடையே எதிர் விளைவுகளை ஏற்படுத்தும் என்றுதான் கூறினேன். அதிமுகவினர் அதைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை.

எங்கள் கூட்டணியில் தொகுதி உடன்பாடு குறித்து கட்சித் தலைமை முறைப்படி அறிவிக்கும்.

வெற்றிவேல் யாத்திரை ஒரு அடையாள யாத்திரை. இந்துக்களைக் கொச்சைப்படுத்தும் நபர்களை அடையாளப்படுத்தவே, இந்த யாத்திரை தொடங்கப்பட்டுள்ளது.

பாஜகவுக்கு இனி தமிழத்தில் பின்னடைவு என்பதே கிடையாது. முன்னேற்றம் மட்டும்தான் இருக்கும்”.

இவ்வாறு வானதி சீனிவாசன் கூறினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே