தப்லீக் ஜமாத் : ஒன்று சேர்ந்து பிளாஸ்மா தானம்

கொரோனா தொற்றிலிருந்து மீண்ட தப்லீக் ஜமாத் உறுப்பினர்கள், மற்ற நோயாளிகளுக்கு உதவும் வகையில், பிளாஸ்மா தானம் செய்து பலரது பாராட்டுகளை பெற்றுள்ளனர்.

நன்கொடையாளர்களை கண்டறிந்து, அவர்களிடம் இருந்து பிளாஸ்மா தானத்தை பெற்று தர வேண்டும் என்ற மருத்துவமனைகளின் கோரிக்கையை ஏற்று, சென்னையில் புதுகல்லூரியில் பணிபுரியும் ஹமீதுதீன், டாக்டர் ஜியாயுல்லா கான், சமூக ஆர்வலர் சமீர் ஆகியோர் ஒன்று சேர்ந்து ரத்ததான முகாம்களை நடத்தி வருகின்றனர்.

இந்த முகாம்களில் தப்லீக் ஜமாத் அமைப்பை சேர்ந்த 20 பேர் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் பிளாஸ்மா தானம் செய்துள்ளனர்.

இது தொடர்பாக ஹமீதுதீன் கூறுகையில், தப்லீக் ஜமாத் அமைப்பினர் மற்றும் அவரது குடும்பத்தினர் என கொரோனாவிலிருந்து மீண்ட 5 ஆயிரம் பேர் பிளாஸ்மா தானம் செய்ய முன்வந்துள்ளனர். 

இது தொடர்பாக, மற்றவர்களுக்கு உதவும் வகையில் செயல்பட வேண்டும் என மத தலைவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

அதேநேரத்தில் பிளாஸ்மா தானம் குறித்த விழிப்புணர்வு குறைவாகவே உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

கீழ்பாக்கம் மருத்துவ கல்லூரி முன்னாள் டாக்டரும், பெரம்பலூர் டாக்டராக பணிபுரிந்து வருபவருமான டாக்டர் ஜியாயுல்லா கான் கூறுகையில், பிளாஸ்மா தானம் செய்வதற்கு, கொரோனாவில் இருந்து குணமடைந்து 28 நாட்கள் கடந்திருக்க வேண்டும்.

வாழ்க்கையில் இரு முறைதான் பிளாஸ்மா தானம் செய்ய முடியும்.

இம்மியுனோகுளோபின் – ஜி பரிசோதனை செய்து, அதில் கிடைக்கும் முடிவுகளை பொறுத்து தான் தானம் செய்ய முடியும். ஊரடங்கு காரணமாக, இங்கிருந்து, பிளாஸ்மா, திருச்சி மருத்துவமனைக்கு சென்று சேர 8 மணி நேரம் ஆகிறது.

பிளாஸ்மா தானம் செய்ய, சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு நட்சத்திரங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

இதன் மூலம் பிளாஸ்மா வங்கி அமைக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

புழல் பகுதியை சேர்ந்த சமீர் கூறுகையில், ரத்த தான முகாம்களை போல், பிளாஸ்மா தானத்திற்கு விளம்பரம் செய்யப்படவில்லை.

இது போன்ற காரணங்களாலும், கொரோனா பாதித்தவர்கள் மற்றும் அதிலிருந்து மீண்டவர்கள் குறித்து உரிய தகவல்கள் கிடைக்கவில்லை; இதனால், பிளாஸ்மா தானம் செய்ய பலர் முன்வருவது கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே