வேலூர் மாவட்டம் அணைக்கட்டு, சோழவரம் சுற்றுவட்ட கிராமத்தில் சாராயம் காய்ச்சப்பட்ட வருவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
அங்குள்ள அரியூர் காவல் நிலைய அதிகாரிகள் 3 பேர் அரியூர் காவல் எல்லைக்கு உட்பட்ட கிராமத்திற்கு சென்றுள்ளனர்.
காவல் உதவி ஆய்வாளர் மற்றும் 2 அதிகாரி என 3 பேர் கிராமத்தில் நடத்திய சோதனையில், இளங்கோ மற்றும் செல்வம் ஆகியோருக்கு சொந்தமான வீட்டிற்குள் சாராயம் காய்ச்சப்பட்டதை கண்டறிந்துள்ளனர். காவல்துறையினர் வருகையை அறிந்து இளங்கோ மற்றும் செல்வம் வீட்டினை பூட்டிவிட்டு தலைமறைவாக இருந்துள்ளனர்.
இந்நிலையில், பூட்டிக்கிடந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்ற காவல் துறையினர், சாராயம் காய்ச்சியவரின் வீட்டின் பீரோவில் இருந்த ரூ.10 இலட்சம் பணம் மற்றும் நகையை கொள்ளையடித்து புறப்பட்டுள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த மக்கள் சாராயம் காய்ச்சினால் அதற்கான நடவடிக்கையை எடுங்கள்., எதற்காக பணம் மற்றும் நகையை பீரோவை உடைத்து கொள்ளையடித்து செல்கிறீர்கள்? என்று கேள்வி எழுப்பி முற்றுகையிட்டுள்ளனர்.
இதன்பின்னர், இந்த தகவல் பாகாயம் காவல்துறையினருக்கு தெரியவரவே, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி பணம் மற்றும் நகையை அவர்களிடமே ஒப்படைத்து அரியூர் காவல் நிலைய அதிகாரிகளை மீட்டு வந்துள்ளனர். இந்த தகவல் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், அரியூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மற்றும் 2 காவல் அதிகாரிகளை பணியிடைநீக்கம் செய்து வேலூர் எஸ்.பி. செல்வகுமார் உத்தரவிட்டுள்ளார். காவல் உதவி ஆய்வாளர் அன்பழகன் மற்றும் காவல் அதிகாரிகள் யுவராஜ், இளையராஜா ஆகியோர் பணியிடைநீக்கம் செய்யப்ட்டுள்ளனர்.