மது விற்பனைக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு

கொரோனா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், நாடு முழுவதும் மது விற்பனைக்கு தடை கோரிய வழக்கில் உத்தரவு பிறப்பிக்க சுப்ரீம் கோர்ட் மறுத்துவிட்டது.

இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மே 17 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

மே 4ம் தேதி கொரோனா கட்டுப்பாடு பகுதிகள் தவிர்த்து மற்ற பகுதிகளில் மதுக்கடைகளை திறக்க அரசு அனுமதி அளித்தது.

40 நாட்களுக்கு பிறகு திறக்கப்பட்டதால், பல்வேறு மாநிலங்களில் ஏராளமானோர் நீண்ட வரிசையில் நின்று மது வகைகளை வாங்கி செல்கின்றனர்.

மதுக்கடைகளில் அதிகளவில் கூட்டம் கூடுவதால், சமூக இடைவெளியை சரியாக பின்பற்றவில்லை என புகாரும் உள்ளது.

இந்நிலையில், மதுக்கடைகளில் கூடும் கூட்டத்தால் கொரோனா தொற்று மிகப்பெரிய அளவில் பரவ வாய்ப்புள்ளதால் மது விற்பனைக்கு தடை விதிக்க வேண்டுமென உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. 

இந்த மனு நீதிபதிகள் அசோக் பூஷண், சஞ்சய் கிஷன் கவுல் மற்றும் பி.ஆர்.கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று (மே 8) விசாரணைக்கு வந்தது.

வீடியோ கான்பிரன்ஸ் மூலம் விசாரித்த சுப்ரீம் கோர்ட் அமர்வு, மதுக்கடைகளில் கூட்டம் கூடுவதை தவிர்க்க மாநில அரசுகள், மது வகைகளை ஆன்லைன் விற்பனை அல்லது ஹோம் டெலிவரி செய்வது குறித்து பரிசீலிக்க வேண்டுமெனவும், மதுவிற்பனை மாநில அரசின் கொள்கை முடிவு என்பதால் இதில் தலையிட விரும்பவில்லை எனவும் கூறியதோடு, மது விற்பனைக்கு தடை கோரிய பொதுநல மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சாய் தீபக், சமூக இடைவெளி சரியாக பின்பற்றப்படுவதில்லை.

மது அருந்துவோர் எண்ணிக்கையை விட. மதுக்கடைகள் எண்ணிக்கை குறைவாக உள்ளது என வாதாடினார்.

இதில் ‘நாங்கள் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. ஆனால் மாநில அரசுகள் சமூக இடைவெளியை பின்பற்றுவதை உறுதி செய்ய, மறைமுக விற்பனை அல்லது ஹோம் டெலிவரி செய்வது குறித்து பரிசீலிக்க வேண்டும்’ என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே