‘வலிமை’ அப்டேட்: பெரும் விலைக்குத் தமிழக உரிமை விற்பனை

வலிமை’ படத்தின் தமிழக உரிமை பெரும் விலைக்கு விற்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் ‘வலிமை’. போனி கபூர் தயாரித்து வரும் இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக நீரவ் ஷா, இசையமைப்பாளராக யுவன் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். இந்தியாவில் படமாக்க வேண்டிய காட்சிகளின் ஒட்டுமொத்தப் படப்பிடிப்பும் முடிந்தது.

தற்போது அந்தக் காட்சிகளுக்கான இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இறுதியாக, சண்டைக் காட்சி ஒன்றை வெளிநாட்டில் படமாக்கப் பயணிக்கவுள்ளது படக்குழு.

இதனிடையே, ‘வலிமை’ படத்தின் தமிழக விநியோக உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவியது. இறுதியாக ரோமியோ பிக்சர்ஸ் மற்றும் கோபுரம் பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து ‘வலிமை’ தமிழக விநியோக உரிமையை பெரும் விலை கொடுத்துக் கைப்பற்றியுள்ளன.

கோபுரம் பிலிம்ஸ் நிறுவனர் அன்புச்செழியன், தமிழ்த் திரையுலகின் பல முன்னணிப் படங்களுக்கு பைனான்ஸ் செய்து வருபவர். அவரே இந்தப் படத்தின் உரிமையைக் கைப்பற்றி இருப்பதால், பெருவாரியான திரையரங்குகளில் இந்தப் படம் வெளியாகும் என்பது உறுதியாகிறது.

‘வலிமை’ படத்தின் தமிழக உரிமை விற்பனையாகி இருப்பது குறித்து போனி கபூர் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

“எங்கள் தயாரிப்பில் உருவான ‘வலிமை’ திரைப்படத்தின் தமிழகத் திரையரங்க உரிமைகளை ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் மற்றும் கோபுரம் சினிமாஸ் ஆகியோரிடம் ஒப்படைத்துள்ளோம் என்பதை அறிவிப்பதில் பே வியூ ப்ராஜக்ட்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸில் நாங்கள் மகிழ்ச்சி கொள்கிறோம்”.

இவ்வாறு போனி கபூர் தெரிவித்துள்ளார்.

மே 1-ம் தேதி அஜித் தனது 50-வது பிறந்த நாளன்று ‘வலிமை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என்றும், அன்று முதல் விளம்பரப்படுத்தும் பணிகளும் தொடங்கும் என்றும் படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே