“சுதந்திர தின நிகழ்ச்சியில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், மூத்த குடிமக்கள் பங்கேற்க வேண்டாம்”: தமிழக அரசு!!

சுதந்திர தின நிகழ்ச்சியில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், மூத்த குடிமக்கள் பங்கேற்க வேண்டாம் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா பரவலை சுட்டிக்காட்டி தமிழக அரசு இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது. சுதந்திர தின நிகழ்ச்சிகளை தொலைக்காட்சியில் கண்டு, வானொலியில் கேட்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சுதந்திரத்தினத்தை முன்னிட்டு சென்னை கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை மறுதினம் (சனிக்கிழமை) காலை 8.45 மணிக்கு தேசியக்கொடி ஏற்றுவார். இந்த நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டவர்கள் காலை 7.45 மணிக்குள் விழா பகுதிக்கு வந்துவிட அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

இந்த ஆண்டு நடக்கும் சுதந்திர தின விழா கொண்டாட்டத்தில் பங்கேற்கும் பார்வையாளர்களின் எண்ணிக்கையை ஓரளவு குறைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாக கூறப்பட்டது. அணி வகுப்பில் பங்கேற்கும் முப்படையினர், காவல்துறையினரின் எண்ணிக்கையும் குறைக்கப்படும் என்று தெரிகிறது.

விழாவுக்கு வரும் சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி, நீதிபதிகள், அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் சமூக இடைவெளிவிட்டு அமர்வதற்கு ஏற்ற வகையில் இருக்கைகள் போடப்பட்டுள்ளன.

விழாவில் பங்கேற்கும் அனைவரும் முககவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. பள்ளி மாணவர்கள், குழந்தைகள் பங்கேற்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. சுதந்திர தின விழா நடைபெறும் பகுதியில் பொதுமக்கள் கூட்டமாக நிற்க அனுமதிக்கப்படமாட்டார்கள்.

இந்த நிலையில், சுதந்திர தின நிகழ்ச்சியில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், மூத்த குடிமக்கள் பங்கேற்க வேண்டாம் என தமிழக அரசு வேண்டுகோள் வைத்துள்ளது. வருடந்தோறும் சுதந்திரதின விழாவில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு விருதுகள் வழங்கப்படுவது வழக்கம்.

இந்த வருடம், கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் டாக்டர்கள், செவிலியர்கள், காவல்துறையினர் உள்ளிட்ட முன்களப் பணியாளர்கள் இந்த சுதந்திர தின விழாவில் கவுரவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Tags :

Preethi

செய்தி தொகுப்பாளர்

Preethi has 289 posts and counting. See all posts by Preethi

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே